Published : 22 Jun 2024 08:55 PM
Last Updated : 22 Jun 2024 08:55 PM

தமிழகம் முழுவதும் 17,962 கோயில்களில் நகைகள் கணக்கெடுப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: “தமிழகம் முழுவதும் 17 ஆயிரத்து 962 கோயில்களில் நகைகள் கணக்கெடுக்கப்பட்டு இதுவரை 542 உயர் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளது” என இந்து சமய அறநிலையத் துறை, உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க கோயில்களின் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், கடந்த 2021 ஜூன் மாதம் தமிழக அரசுக்கு 75 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டளைகளை அமல்படுத்தியது தொடர்பாக தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல்களை வழங்க தொல்லியல் துறை, ஆகம வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மாநில நிபுணர் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.

கோயில்களில் உள்ள புராதன சிலைகள் சேதம், நிதி விவகாரங்கள் தொடர்பாக தேவைப்படும் நேரங்களில் அரசின் அனுமதியைப் பெற்று மத்திய கணக்குத் தணிக்கை குழுவை கொண்டு தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோயில்களின் சொத்துக்கள் குறித்து அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், கடந்த 2021 ஜூன் முதல் இதுவரை 351 கோயில்களில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு பறக்கும் படைகள் இதுவரை 179 கோயில்களில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது. தமிழக கோயில்களின் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புக்கு தனியாக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கோயில்களின் பராமரிப்புக்கும், விழாக்களுக்கும், ஊழியர்களி்ன் ஊதியத்துக்கும் கோயில் நிதி பயன்படுத்தப்படுகிறது. உபரி நிதி, நிபந்தனைகளுக்குட்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2023 – 24ம் ஆண்டில் கூடுதலாக 2 ஆயிரம் கோயில்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது 17 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் அமலில் உள்ளது.

கடந்த 2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரை கோயில்களின் திருப்பணிக்காக அரசு மானியமாக ரூ.101 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் பராமரிப்புக்காக 2024–25ஆம் ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் சொத்துக்களை தணிக்கை செய்ய தனி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 17 ஆயிரத்து 962 கோயில்களில் நகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்த 17 ஆயிரத்து 450 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 மே முதல் 2024 மார்ச் வரையிலான 3 ஆண்டு காலகட்டத்தில் ரூ.5 ஆயிரத்து 812 கோடியே 64 லட்சம் மதிப்பிலான 6 ஆயிரத்து 324 ஏக்கர் நிலங்கள், 1,215 கிரவுண்ட் காலிமனை, 137 கிரவுண்ட் கோயில் குளங்கள், 186 கிரவுண்ட் பரப்பில் அமைந்துள்ள கட்டிடங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

காணாமல் போன 1,424 சிலைகளில், 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. சிலைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட 23 மையங்களில் 8,693 சிலைகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. குறி்ப்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்பு கேமரா, அலாரம் உள்ளிட்ட வசதிகளுடன் உயர் பாதுகாப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு 1,842 அறைகள் கட்ட டெண்டர் கோரப்பட்டு, 542 அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

சிலை திருட்டு, சொத்துக்களின் பெயர் மாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய 111 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர கோயில்களில் ஊழியர்கள் நியமனம், ஊதியம், ஓய்வூதியப்பலன்கள் வழங்கவும் போதிய நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x