Last Updated : 22 Jun, 2024 08:12 PM

1  

Published : 22 Jun 2024 08:12 PM
Last Updated : 22 Jun 2024 08:12 PM

கள்ளச் சாராய வழக்கில் இதுவரை 11 பேர் கைது: கள்ளக்குறிச்சி நிலவரம் என்ன?

கள்ளக்குறிச்சி: தமிழகத்தை உலுக்கிவரும் கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களது பின்புலம் குறித்து முக்கியத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் என்ற பெயரில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை விற்பனை செய்ததை வாங்கி அருந்தியவர்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான தனிக்குழுவினர் கடந்த 4 தினங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தமோதரன், இவரது மனைவி சந்திரா ஆகியோரை கைதுசெய்து கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, அடுத்தக் கட்ட விசாரணை நடத்திய போலீஸார், இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளானவராக கருதப்படும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரை, பண்ருட்டி அருகே கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் விரியூரைச் சேர்ந்த ஜோசப்ராஜா என்பவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து ஜோசப்ராஜா அளித்த தகவலின் பேரில் விரியூர் லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில், மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும், கடலூர் மாவட்டம் தம்பிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதன்குமார் என்பவர் கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் எரி சாராயம் அருந்தி 27 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பேர் மீது கொலை வழக்கு: இந்த வழக்கில் 3 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் இருவர் ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது. உயிரிழந்தவர்களில் கள்ளக்குறிச்சி மாதவச்சேரியைச் சேர்ந்த க.கண்ணன் (53), வீராச்சாமி (40), வீரமுத்து (33) ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்தவர்களுக்கும், மேலும் சிலருக்கும் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, மாதவச்சேரியைச் சேர்ந்த க.மணிகண்டன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாதவச்சேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த மு.ராமர் (55), சேஷசமுத்திரம் சின்னதுரை (36), அரியூர் ஜோசப்ராஜா ஆகிய 3 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சிபிசிஐடி போலீஸாரால் ராமர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவரும் ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பிப்பேட்டையில் தஞ்சமடைந்த கள்ளச் சாராய கூட்டாளிகள்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் கைதாகியுள்ளவர்களில் முக்கிய நபர்கள் அனைவரும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த தம்பிப்பேட்டையில் தஞ்சமடைந்தது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் மூளையாகக் கருதப்படும் மரக்காணம் மதன்குமார், கடந்த ஆண்டு மரக்காணம் சம்பவத்தில் குண்டர் தடுப்புக் காவலில் கைதாகி வெளிவந்தவுடன், மீண்டும் கள்ளச்சாராய மூலப்பொருள் விநியோகத்தில் இறங்கியுள்ளார். தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் உள்ள மரக்காணம் மதன்குமார், மாதேஷ், தம்பிப்பேட்டை ராஜா ஆகியோர் எரி சாராயம் மொத்த வியாபாரிகள் என்பதும், சின்னத்துரை கல்வராயன்மலையில் இருந்து மொத்தமாக கள்ளச்சாராயம் வாங்கி விநியோகிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் விரியூர் ஜோசப்ராஜா, லூர்துசாமி, மாதவச்சேரி ராமர் ஆகியோர் பைக்கில் வைத்துக் கொண்டு பாக்கெட் சாராயத்தையும் கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தமோதரன், அவரது மனைவி சந்திரா ஆகியோர் தனித்தனியே கடை அமைத்து வியபாரம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சந்திராவின் மூத்த சகோதரரான ராஜா, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த தம்பிப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்டவர்கள் என்பதும், எரிசாராயத்தை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்து, தம்பிப்பேட்டையில் வைத்துதான் மற்ற ஊர்களுக்கு விநியோகிப்பது வழக்கமாம். அதேபோன்று கள்ளச்சாராய பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்கள் தஞ்சமடைவதும் தம்பிப்பேட்டையில்தானாம். கடலூர் போலீஸார் பண்ருட்டி அருகே வாகனத் தணிக்கை செய்தபோது, அவ்வழியே வந்த சின்னத்துரையை பிடித்து விசாரித்த போதுதான், இவர்களின் செயல்பாடுகளும் தெரியவந்துள்ளது.

உடலை தோண்டியெடுக்க முடிவு: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 54 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் கள்ளச்சாராயம் அருந்தியதால்தான் உயிரிழந்தனர் என்ற தகவல் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரது உடலை தோண்டி பிரேதப் பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது

கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரிக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் இளையராஜா ஆகியோர் கடந்த 18-ம் தேதியே உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களது உறவினர்கள் ஜெயமுருகனின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இளைராஜாவின் உடல் தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, 19-ம் தேதி பலர் உயிரிழக்க, ஜெயமுருகனும், இளையராஜாவும் கள்ளச் சாராயத்தால் தான் உயிரிழந்ததனர் என்பதை அறியவில்லை எனவும், அதனால் அவர்களுக்கு நிவாரணம் வேண்டும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து, அடக்கம் செய்யப்பட்ட ஜெயமுருகனின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மருத்துவனையில் இருந்து தப்பியோடிவர் உயிரிழப்பு: கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி கடந்த 20-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து அவரை, அவரது உறவினர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது, செல்ல மறுத்தவிட்டார். பின்னர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x