Published : 22 Jun 2024 07:06 PM
Last Updated : 22 Jun 2024 07:06 PM

காளிகாம்பாள் கோயில் அறங்காவலர் தேர்தலை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் அறங்காவலர் தேர்தலை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கான அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், எனவே அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி தேவஸ்தான உறுப்பினர் ஜெயராஜகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தேர்தல் முறையாக நடந்து அறங்காவலர்களும் பொறுப் பேற்றுக் கொண்டுள்ளதால், அதனை ரத்து செய்யும்படி கோர முடியாது” என கோயில் அறங்காவலர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல, “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” என அரசுத் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.பி.பாலாஜி, “ஏற்கெனவே தேர்தல் முடிந்து, அறங்காவலர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தற்போது தேர்தலை ரத்து செய்யக் கோர முடியாது. அறநிலையத்துறை சட்டப்படி, பதவியேற்றுக் கொண்ட அறங்காவலர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனி்ல், அதற்கான காரணங்களை தெரிவித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தான் முறையிட வேண்டும்” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x