Published : 22 Jun 2024 05:49 PM
Last Updated : 22 Jun 2024 05:49 PM
சென்னை: சொத்து சம்பந்தமான நீதிமன்ற உத்தரவுகளை பதிவு செய்து தர முடியாது என சார்-பதிவாளர்கள் மறுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த என். ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘காரிமங்கலத்தில் உள்ள எங்களது தந்தையின் பூர்விக குடும்பச் சொத்து தொடர்பாக எங்களுக்கும், தந்தையின் முதல் மனைவியின் மகனான வெங்கட்ரமணன் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தருமபுரி சார்பு நீதிமன்றத்தி்ல் கடந்த 1989-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அந்த சொத்தில் எங்களுக்கும் சமபங்கு உரிமை உள்ளது என தீர்ப்பு வந்தது.
இந்த தீர்ப்பை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்படி சார்பு நீதிமன்ற உத்தரவை பதிந்து கொடுக்கும்படி காரிமங்கலம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடந்த பிப். 2-ம் தேதி விண்ணப்பித்தபோது, சொத்து தொடர்பான அசல் ஆவணங்களையும், 10 நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட வில்லங்க சான்றிதழ்களையும் சமர்ப்பித்தால் மட்டுமே அந்த நீதிமன்ற உத்தரவை பதிவு செய்து கொடுக்க முடியும் எனக்கூறி சார்-பதிவாளர் மறுப்பு தெரிவித்து நிலுவையில் வைத்து விட்டார்.
இது சட்டவிரோதம் என்பதால் நீதிமன்ற உத்தரவை பதிவு செய்ய மறுத்து சார்-பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி எங்களது பெயரில் சொத்தை பதிவு செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீ்ஷ்குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஏ.சரவணன், அய்யப்பராஜா ஆகியோரும், அரசு தரப்பில் சிறப்பு அரசு ப்ளீடர் யோகேஷ் கண்ணதாசனும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதருப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். சதீஷ்குமார் ‘‘சொத்து தொடர்பான வழக்கை விசாரித்த தருமபுரி சார்பு நீதிமன்றம் இருதரப்பிலும் அசல் ஆவணங்களை ஆராய்ந்து அதன்பிறகே உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட காரிமங்கலம் சார் -பதிவாளர் அசல் ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அந்த நீதிமன்ற உத்தரவை பதிவு செய்து கொடுக்க முடியும் எனக்கூறி மறுத்து இருப்பது சட்டவிரோதமானது.
சொத்து தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை பதிவு செய்து கொடுக்க முடியாது என மறுக்கக்கூடாது என சார்-பதிவாளர்களுக்கு பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள போதும், நீதிமன்ற உத்தரவுகளை சார்-பதிவாளர்கள் மதிக்காமல் நடப்பது துரதிருஷ்டவசமானது.
குறிப்பாக, சார்-பதிவாளர்கள் தங்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் போல நினைத்துக்கொண்டு இதுபோல வரம்பு மீறி செயல்படக்கூடாது. மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்.
எனவே இ்ந்த வழக்கில் மனுதாரருக்கு சொந்தமான சொத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பதிவு செய்ய மறுத்த சார்-பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் அளிக்கும் நீதிமன்ற உத்தரவை சார்-பதிவாளர் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்து கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT