Published : 22 Jun 2024 05:59 PM
Last Updated : 22 Jun 2024 05:59 PM

கள்ளக்குறிச்சி சம்பவம்: திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் - ஆயிரக்கணக்கானோர் கைது

கள்ளச் சாராய உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, சேலம், விருதுநகர், கிருஷ்ணகிரி என தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பாஜக போராட்டம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

சென்னையில் 600 பேர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். முன்னதாக 4 புறங்களிலும் தடுப்புகளை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த வருபவர்களை போலீஸ் வேன், அரசு பஸ்களில் ஏற்றி காவல்துறையினர் உடனுக்குடன் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பாஜகவினர் திமுக அரசை கண்டித்தும் கள்ளச்சார சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும், திமுக அரசின் அராஜக போக்கை கண்டித்தும் முழக்கமிட்டனர். தொடர்ந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட பாஜக வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

எச்.ராஜா கைது: திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுட்ட பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் தள்ளுமுள்ளு: சேலம் கோட்டை மைதான பகுதியில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, சண்முகநாதன், சுதிர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் , பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து பாஜக-வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 350-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

அனுமதி மறுப்பு: விருதுநகர் தேசபந்து திடலில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அதோடு, டிஎஸ்பி பவித்ரா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தேசபந்து திடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த பாஜகவினர் 29 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள்: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஸ்வத்தமன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு எதிராகவும், உயிரிழப்புகளுக்கு தார்மிக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேடை அமைக்க முயன்றவர்கள் மீது வழக்குப்பதிவு: கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் செங்கல்பட்டில் போராட்டம் நடத்த மேடை அமைக்க போலீஸார் தடை விதித்தனர். தடையை மீறி மேடை அமைக்க முயன்ற மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு அதற்கு அனுமதி கேட்டு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மனு அளித்தனர். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்த மேடை அமைப்பதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதைத்தொடர்ந்து தடையை மீறி மேடை அமைத்த பாஜகவினர் மூவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த எஞ்சிய பாஜகவினரை தனியாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

மதுபானங்களை வாய்க்காலில் கொட்டி ஆர்ப்பாட்டம்: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் என. சதீஷ்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சன்னதி தெருவில் கூடினர். அங்கிருந்து அவர்கள் கண்டன முழக்கமிட்டபடி ஊர்வலமாக புறப்பட்டு காந்தி பூங்காவை நோக்கிச் சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பகோணம் டிஎஸ்பி-யான கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸார், 4 பெண்கள் உட்பட 50 பேரை கைது செய்தனர். முன்னதாக, காமராஜர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் பதுபானங்களை வாங்கி அருகில் உள்ள மோடரி வாய்க்காலில் கொட்டியதுடன் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கண்டன முழக்கமிட்டனர்.

குண்டுக்கட்டாக தூக்கி கைது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் தடையை மீறி பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சியினரை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x