Last Updated : 22 Jun, 2024 03:58 PM

 

Published : 22 Jun 2024 03:58 PM
Last Updated : 22 Jun 2024 03:58 PM

“தமிழக அரசை டிஸ்மிஸ் செய்க” - மத்திய அரசுக்கு புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

கள்ளச் சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள அம்மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுச்சேரி: “கள்ளக்குறிச்சியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச் சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். இதற்கு மேல் ஒரு நிமிடம் கூட முதல்வராக நீடிப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எவ்வித உரிமையும் இல்லை. மனித உயிர்களை காப்பாற்ற தவறிய தமிழக அரசை இந்திய அரசியலமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,” என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின் பேரில், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் பிரட், பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன் கூறியது: “தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசு, மக்களை காப்பாற்றும் பொறுப்பில் இருந்து முழுமையாக தவறிவிட்டது. தமிழகத்தில் தினந்தோறும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருட்கள் விற்பனை, கொலை, கொள்ளைச் சம்பவங்கள், கள்ளச்சாராய விற்பனை போன்றவை ஆட்சியாளர்கள் துணையோடு அரங்கேறி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பலர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதை சர்வாதிகார தனத்தோடு ஆளும் திமுக அரசு காவல்துறையை ஏவி தடுத்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து வெட்கி தலைகுனிய வேண்டிய தமிழக முதல்வர், ஏதேதோ காரணங்களை எடுத்துக்கூறி பிரச்சினையை திசை திருப்புகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்தி வரப்பட்டதாக கூறியுள்ளார். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்தி செல்லப்பட்டதா? என்பது குறித்து புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி பதிலளிக்க வேண்டும்.இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வருகை தந்த போது, புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்தப்படவில்லை. புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்தப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கவில்லை என்று ஒரு பொய் தகவலை கூறியுள்ளார். தமிழக முதல்வர் கூறிய கருத்தையே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருப்பது உண்மையை திசை திருப்பும் செயலாக உள்ளது.

கடந்த ஆண்டு மரக்காணத்தில் விஷச் சாராயம் அருந்தி 20-க்கும் மேற்படட்டவர்கள் இறந்தனர். அதற்குப் பிறகும் ஆளும் திமுக அரசு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மீண்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச் சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். இதற்கு மேல் ஒரு நிமிடம் கூட முதல்வராக நீடிப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எவ்வித உரிமையும் இல்லை. மனித உயிர்களை காப்பாற்ற தவறிய தமிழக அரசை இந்திய அரசியலமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

இந்த பிரச்சினையில் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி என பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டு உள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார். பல்வேறு மாநிலங்கள் சம்பந்தபட்ட இந்த சட்ட விரோத செயலை தமிழக காவல்துறையினர் விசாரித்தால் உண்மைகள் மறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே 3 மாநிலங்கள் சம்பந்தபட்ட இந்தப் பிரச்சினையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x