Published : 22 Jun 2024 04:56 PM
Last Updated : 22 Jun 2024 04:56 PM
புதுச்சேரி / கள்ளக்குறிச்சி: பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து இருந்தாலே கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்ற அதிர்ச்சியும், வேதனையும் தரும் தகவல், காவல் துறை விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்ற கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சின்னதுரை, மாதேஷ், ஜோசப் ஆகியோரை வரிசையாக சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஏற்கெனவே கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தொடர்புடையோரே இச்சம்பவத்துக்கும் காரணமாகியுள்ளனர் என்பதையும் போலீஸார் அதில் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கைகள், விசாரணை குறித்து காவல் துறை உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, “சின்னத்துரையிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் மாதேஷ், ஜோசப் ஆகியோரிடமிருந்து மெத்தனாலை பெற்றதாக தெரிவித்தார். அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து வாங்கியதாகவும், சென்னையில் இருந்து வாங்கியதாகவும், புதுச்சேரி வழியாக கடத்தி வந்ததாகவும் பல தகவல்களை முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மதன்குமார் என்ற தரகர் மூலம் மெத்தனாலை வாங்கி விற்றதாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, மதன்குமாரை பிடித்து விசாரித்தபோது, ஆந்திராவில் மூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றிலிருந்து மெத்தனாலை வாங்கி வந்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து, ஆந்திராவுக்கு ஒரு தனிப்படை சென்றது. ஆந்திராவில் மதன்குமாருக்கு மெத்தனால் விற்கும் தரகராக செயல்பட்டவர் பிடிப்பட்டார். அவரிடமும் விசாரணை நடந்தது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் சிபிசிஐடி வசம் சிக்கியுள்ள மதன்குமார், கடந்த ஆண்டு எக்கியார்குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்து 12 பேர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். சமீபத்தில்தான் அவர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்ததும் மீண்டும் மெத்தனால் விற்க முடிவெடுத்துள்ளார்.
இம்முறை சென்னையிலிருந்து மெத்தனால் வாங்காமல் ஆந்திராவில் உள்ள புரோக்கர் மூலம் மெத்தனாலை வாங்கி வந்து விற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து போலீஸார் கண்காணித்திருந்தாலே கள்ளக்குறிச்சியில் 50-க்கும் மேற்பட்ட உயிர் பலி நிகழ்ந்திருக்காது” என்று குறிப்பிடுகின்றனர்.
கள்ளச் சாராயம் Vs விஷச் சாராயம்: 50-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி சாராயத்தின் தன்மை குறித்து மருத்துவர்களிடையே விசாரித்தபோது, “அரசு அனுமதியின்றி பல்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்தி காய்ச்சி, வடிகட்டி குடித்தால் அது கள்ளச் சாராயம். அதில் போதைக்காக மெத்தனால் கலந்தால் விஷச் சாராயமாகி விடுகிறது.
இது தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்து விடும். நரம்பு மண்டலம் வழியாக ஊடுருவும் மெத்தனால் மூளையை பாதித்து மூளையின் செல்களை அழித்து மரணத்தை ஏற்படுத்துகிறது.
வயிற்றுக்குள் இந்த விஷச் சாராயம் சென்றவுடன் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றும். ஆனால், அடுத்த சில நொடிகளில் வயிறும், குடலும் வெந்து விடும். மெத்தனால் கலந்த சாராயம் குடித்தால் நுரை நுரையாக வாந்தி வருவதுண்டு. அந்த வாந்தி நுரையீரலுக்கு செல்வதால் மூச்சு அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும்” என்றனர்.
எப்படி கிடைக்கிறது மெத்தனால்? - “ஒரு தொழிற்சாலையில் எவ்வளவு மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது? எவ்வளவு இருப்பு உள்ளது? மெத்தனால் பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தின் காலக்கெடு என்ன? - இதுபோன்ற விவரங்களை தொழிற்சாலைகள் கட்டாயம் பராமரிக்க வேண்டும் என்ற நடைமுறை சட்டத்திட்டங்கள் உண்டு.
இதையும் மீறி சாராய வியாபாரிகளுக்கு தடையின்றி மெத்தனால் கிடைக்கிறது. எந்த தொழிற்சாலையில் மெத்தனால் கிடைக்கும் என சாராய வியாபாரிகள் அறிந்து வைத்துள்ளனர். அந்த தொழிற்சாலை உரிமையாளரிடமோ, அங்கு பணியாற்றுபவர்களிடமோ கூட்டணி அமைத்து இந்த மெத்தனாலை தரகர்கள் பெறுகின்றனர். பின்னர் அதிக பணம் மூலம் சாராய வியாபாரிகளுக்கு விற்கின்றனர்.
நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சம்பவத்துக்குப் பின்னராவது மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். ரூ.50 லட்சம் செலவழித்து இம்மருந்தை வாங்கி வைத்திருந்தால் பல பேர் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இனியாவது அரசு இவைகளை, அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைப்பது அவசியம்” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இதுவரை 10 பேர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் இதுவரை 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சாராய வியாபாரி கண்ணுகுட்டி , அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகிய மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மூன்று பேரையும் வரும் ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாரால் பண்ருட்டி அருகே கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய புதுச்சேரி ஜோசப்ராஜா என்ற குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் விரியூர் லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில், மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும், கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற பெண் சாராய வியாபாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- செ.ஞானபிரகாஷ், ந.முருகவேல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT