Published : 22 Jun 2024 02:46 PM
Last Updated : 22 Jun 2024 02:46 PM
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விழுப்புரத்திலும் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அங்கு கடந்த 3 நாட்களில் 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 165 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்த 180-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் தற்போதுவரை 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான பிரவீன், ஜெகதீஷ் ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி க்கு சென்று அங்கு விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். கடந்த 2 நாட்களாக வயிற்று எரிச்சல் ஏற்பட்ட நிலையில் மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று பிரவீன், ஜெகதீஷ் ஆகியோரின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இருவர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே சென்னை, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி. சுமை தூக்கும் தொழிலாளியான இவர் சென்னையிலிருந்து லாரியில் கடந்த 17-ம் தேதி விழுப்புரம் வந்துள்ளார். இங்குள்ள விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த அவர் இரு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு சென்னை சென்றுள்ளார்.
வீட்டில் வைத்திருந்த கள்ள சாராய பாக்கெட்டுகளை 20ம் தேதி குடித்த கிருஷ்ணசாமி கடுமையான வயிற்று வலி மற்றும் கண் எரிச்சல் காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் பின்னர் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலும் நச்சு சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும் என கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை சாராயம், மதுபாட்டில்கள், கள் விற்பனை செய்ததாக173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT