Published : 22 Jun 2024 01:59 PM
Last Updated : 22 Jun 2024 01:59 PM
சென்னை: “கள்ளச்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்” என திமுக எம்எல்ஏ-க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்து ஆயத்துறை இயக்குநர்கள் மாற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை நேரில் பார்வையிட வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசாமல் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.அதிமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கள்ளச்சாராய சம்பவங்களைப் பற்றி எல்லாம் வாய் திறக்காத ராமதாஸ், எங்கள் மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
அவர் சொல்லும் குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் பொது வாழ்வில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால், நிரூபிக்க தவறினால் எங்கள் மீது குற்றச்சாட்டியவர்கள் அரசியலில் இருந்து விலகுவார்களா? பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கும் எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளோம்” என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT