Published : 22 Jun 2024 11:50 AM
Last Updated : 22 Jun 2024 11:50 AM
சென்னை: “அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதிலும் 1,535 ஆம்னிப் பேருந்துகள் தமிழகத்தில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னிப் பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழகத்துக்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன.
இவற்றுள் பெரும்பான்மையானவை பாண்டிச்சேரி, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன. மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து அந்த மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழகத்துக்கு எந்த ஒரு வரியும் செலுத்தாமல் தமிழகத்துக்குள்ளாகவே இயங்கி வருகின்றன. இதுவும் ஒரு விதி மீறலாகும்.
மேலும் இந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னிப் பேருந்துகளில் பல தமிழக மாநிலம் வழியே பிற மாநிலங்களுக்கு பயணிக்கின்றன. அவ்வாறு செல்லும்பொழுது விதிகளை மீறி தமிழகத்துக்குள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
இவ்வகை ஆம்னிப் பேருந்துகளும் தமிழகத்துக்கு எந்த வரியும் செலுத்துவதில்லை. இவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளால் அரசுக்கு, பேருந்து ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.1,08,000 வீதம் ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.4,32,000 நிதி இழப்பு எற்படுகிறது.
மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழகத்துக்குள் முறைகேடாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர்.
இதனை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 இதர மாநிலப் பதிவெண் கொண்டு அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று விதிகளுக்குப் புறம்பாக தமிழகத்துக்குள் இயங்கும் ஆம்னிப் பேருந்துகளில் நாளது தேதி வரை 112 ஆம்னி பேருந்துகள் மட்டுமே தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழகத்தில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், இன்னும் 793 ஆம்னிப் பேருந்துகள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்துக்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. இத்தகையவர்களால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.34.56 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது.
அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் அதனை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுப் போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் மற்றும் விதிகளின்படி முறையாக இயங்கி வரும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கங்களை சீர்குலைக்கும் விதமாக பயணக் கட்டணங்களை வெகுவாகக் குறைத்து, முறைகேடாக இயக்கி வருவதால் அரசுப் பேருந்துகளுக்கும், முறையாக இயங்கி வரும் இதர ஆம்னிப் பேருந்துகளுக்கும் கடுமையான நிதி இழப்பினை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.
இவர்களின் இந்தப் போக்கு தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் முறையாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கங்களையே சீர்குலைக்கும் விதமாக உள்ளது.
மேலும், இத்தகைய பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் வடிவமைப்பில் அகில இந்திய அளவில் பேருந்துகளுக்கான வடிவமைப்பு நெறிமுறைகளுக்கு (All India Bus Body Code) முரணாக கூடுதல் படுக்கைகளையும், கூடுதல் இருக்கைகளையும் இருக்குமாறு வடிவமைப்பில் மாற்றம் செய்து இயக்கப்பட்டு வருகின்றன.
முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும்பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராயந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து 13.06.2024 அன்று வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து பக்ரித் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பின் அடிப்படையிலும் 18.06.2024 அன்று முதல் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலாச் அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழகத்துக்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் உடனடியாக Detain செய்யப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அத்தகைய ஒரு ஆம்னிப் பேருந்தும் இனி இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு துறையின் சார்பில் வெளியிடப்பட்டு இருந்தது. இதனடிப்படையில் மாநிலம் முழுவதிலும் கடந்த 18.06.2024 முதல் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலம் முழுவதிலும் 62 ஆம்னிப் பேருந்துகள் மேற்கூறிய விதிமீறல்களுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இவ்வகை ஆம்னிப் பேருந்துகள் அவற்றின் உரிமையாளர்களால் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்னையும், போக்குவரத்து ஆணையரையும் சந்தித்து அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், மேற்கொண்டு 200 ஆம்னிப் பேருந்துகளுக்கு மேலாக தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அனைத்து பேருந்துகளின் இயக்கத்தினையும் முறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT