Published : 22 Jun 2024 10:27 AM
Last Updated : 22 Jun 2024 10:27 AM
சென்னை: சட்டப்பேரவையில் இருந்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-ம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் போலவே அதிமுக நிர்வாகிகள் இன்றும் கருப்பு உடை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், கேள்வி நேரத்துக்கு முன்பாகவே அதிமுகவினர் கள்ளச் சாராய சம்பவத்துக்கு நீதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்த நிலையில், நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்றும், பேச வேண்டிய நேரத்தில் பேச அனுமதி தருகிறேன் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். இதனால் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது கள்ளச் சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் கோஷமிட்டவாறு வெளியேறினர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எதிர்க்கட்சி என்கிற முறையிலும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும், சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சினையை பேசுவதற்கு அனுமதி கேட்டோம். பலமுறை குரல் கொடுத்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டார்.
இது மக்களின் உயிர் பிரச்சினை. தினந்தோறும் மக்கள் இறந்து கொண்டே இருக்கின்றனர். இதைவிட பெரிதாக விவாதிக்க என்ன இருக்கிறது? இதற்காக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எத்தனை பேர் மது அருந்தி உள்ளனர்? இதுவரை எத்தனை பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்? அவர்களின் நிலை என்ன? எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? இந்த விவரங்களை எல்லாம் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் பேச அனுமதி கோரினோம். ஆனால், இன்றைக்கும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
இன்றைய தினம் வரை கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தவகையில் இறப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அரசோ, மெத்தன போக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரசு வேகமாக செயல்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். அதேபோல நேற்றைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமிபிசோல் விஷமுறிவு ஊசிக்குப் பதிலாக ஓமிபிரசோல் எனும் அல்சருக்கு பயன்படுத்தப்படும் மருந்து குறித்து பேசியிருக்கிறார்.
ஓமிபிசோல் ஊசி அவர்களுக்கு எங்கும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி இன்றைக்கு அந்த மருந்தானது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால், இம்மருந்தானது மருத்துவத்துறையில் அங்கீகாரப்படி தடை செய்யப்படவில்லை. இந்த மருந்தை ஆபத்தான நேரத்தில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மருந்தானது மருத்துவமனைகளில் தற்போது இல்லை.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். நாங்கள் இவ்விவகாரத்தில் பொய் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு வந்ததால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். காலதாமதமாக அவர்கள் வருவதற்கு யார் காரணம்? அரசாங்கம் தான் காரணம்.
அந்த மாவட்டத்தின் ஆட்சியர், 3 பேர் இறந்தவுடன் அவர்கள் வயிற்றுவலி, வலிப்பு, வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டதாகவும், கள்ளச் சாராயம் வதந்தி என்றும் அறிவித்தார். மாவட்ட ஆட்சியர் உணமையை சொல்லியிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். எனவே சுகாதாரத்துறை அமைச்சர் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக வந்தார்கள் என்று சொல்வது பச்சைப் பொய்யாகும். இது அரசின் கையாலாகாதனத்தை வெளிப்படுத்துகிறது. அரசின் நிர்வாகமின்மை காரணமாக இந்த நிலைமை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சியில் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளச் சாராய விற்பனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இதுபற்றி முதல்வருக்கு தெரியாது என்றும், டிஜிபிக்கு தெரியாது என்றும் சொல்லியிருக்கிறார். பின் எதற்கு முதல்வர் தேவை? டிஜிபி தேவை?
அப்பகுதியில் உள்ள காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனையை செய்திருக்க முடியாது. மேலும், திமுக கவுன்சிலர்கள் 2 பேருக்கும், திமுக மாவட்டச் செயலாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இவ்விவகாரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ வேண்டும். இதையொட்டியே நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளோம். நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து பயந்து வெளியேறவில்லை. முதல்வருக்கு தைரியம் இருந்திருந்தால் எங்களுடன் விவாதித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT