Published : 22 Jun 2024 05:12 AM
Last Updated : 22 Jun 2024 05:12 AM

கள்ளச் சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.5000; ரூ.5 லட்சம் வைப்பீடு: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் நிலையான வைப்பீடாக வைக்கப்படும். மாதம்தோறும்பராமரிப்பு தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பான கவனஈர்ப்பு தீர்மானத்தில், நிவாரணத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி சம்பவத்தை பொருத்தவரை, பாதிக்கப்பட்ட 164 பேரில் 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கள்ளக்குறிச்சியில் 67 பேர், சேலத்தில் 32 பேர், விழுப்புரத்தில் 2 பேர், புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் எனமொத்தம் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர்மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவிந்தராஜ் மனைவி விஜயா, தாமோதரன், மதன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பு உடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களையும் பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்துவோம்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம்நிவாரண நிதியுடன் கூடுதல் நிவாரணங்களும் வழங்கப்படும்.

அதன்படி, பெற்றோர் இருவரையோ, ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப் படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவையும் அரசே ஏற்கும்.

பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலரின் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது முடியும் வரை, மாதம்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்பீடாக வைக்கப்படும். அவர்களுக்கு 18 வயது முடிந்ததும், அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும்.

பெற்றோரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ, ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்டஉதவிகளிலும் முன்னுரிமை தரப்படும்.

விருப்பத்தின்பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள், விடுதிகளில் சேர்க்கப்படுவார்கள்.

இதுபோல மீண்டும் நிகழாத வகையில்,அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும்,கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விரிவானவிசாரணை மேற்கொள்ளவும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோகுல்தாஸ்தலைமையில் ஒருநபர் ஆணையம்அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 3 மாதங்களுக்குள் வழங்கும். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு 51 ஆக உயர்வு: கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 184 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 41 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 12 பேரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x