Last Updated : 21 Jun, 2024 08:41 PM

9  

Published : 21 Jun 2024 08:41 PM
Last Updated : 21 Jun 2024 08:41 PM

கள்ளச் சாராய மரணங்களும், அரசின் அதிகபட்ச நிதியுதவிகளும் - விமர்சனங்கள் சரியா?

கள்ளச் சாராயத்துக்கு தாயையும் தந்தையையும் இழந்து வாடும் கருணாபுரத்தின் கோகிலா (16), ஹரீஷ் (15), ராகவன் (14) | படம்: எஸ்.எஸ்.குமார்

கள்ளச் சாராய மரணம் தமிழகத்துக்குப் புதிதல்லதான். ஆனால், ஒரு சம்பவம் நடந்தால் ஓராயிரம் கேமராக்களும், பல நூறு பேனாக்களும் அங்கே கவனத்தை குவிக்கும் ஊடக வெளிச்சம் நிறைந்த காலம் என்பதால் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் வீரியம் வீடுதோறும் சென்று சேர்ந்து உருகாதோர் உள்ளங்களையும் கூட உருக்கியுள்ளது.

குறிப்பாக, கள்ளச் சாராயத்துக்கு தாயையும் தந்தையையும் இழந்து நிற்கும் கருணாபுரத்தின் கோகிலா (16), ஹரீஷ் (15), ராகவன் (14) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் முகமும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்புணர்ச்சியையும் அசைத்துப் பார்ப்பதுபோல் அமைந்துள்ளது. தந்தை சுரேஷ் பெயின்ட்டராகவும், தாய் வடிவுக்கரசி தினக்கூலியாகவும் வேலை பார்த்துள்ளனர். சுரேஷ் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். சம்பவத்தன்று அவர் மது அருந்திவிட்டு வந்துள்ளார். சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. அவர் ஊற்றி வைத்திருந்தது சாராயம் எனத் தெரியாமல் அருந்திய வடிவுக்கரசிக்கும் பாதிப்பு. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட முதலில் வடிவுக்கரசி பிறகு சுரேஷ் என இருவரும் இறந்தனர். இப்போது 3 குழந்தைகளும் ஆதரவற்று நிற்கின்றனர்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் நிவாரணங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர். இவ்வாறாக அரசு அறிவித்துள்ளது.

கள்ளச் சாராய மரணங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கலாமா? - இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்கப்பட்டாலும் கூட கள்ளச் சாராய மரணங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கலாமா என்ற பக்கவாட்டு விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

இதனை எதிர்ப்பவர்கள் கள்ளச் சாராய மரணங்களுக்கு நிவாரண உதவி வழங்கினால், அது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் எனக் கூறுகின்றனர். இன்னும் சிலர், “குடிநோயாளிகளை குடித்தால் தான் குடித்து செத்தால்தான் என்ன அரசாங்கம் இழப்பீடு தரும். அது நான் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாத பெரிய தொகையாக இருக்கும் என்ற எண்ணத்துக்கு அவர்களைத் தள்ளும்” எனக் கூறுகின்றனர்.

இன்னொரு புறம் கள்ளச் சாராயம் என்பது அரசு நிர்வாகத் தோல்வியின் விளைவு. காவல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் நிர்வாகத் தோல்வியால்தான் இவை தலைதூக்குகின்றன. முழுக்க முழுக்க அரசு தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வில் அரசு தார்மிக பொறுப்பேற்றுக் கொள்வதாக வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் கூட இத்தகைய நிவாரணத் தொகையை அளிப்பது அதன் கடமை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் மட்டுமல்ல, பாமக போன்ற அரசியல் கட்சிகள் கூட கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் அவ்வப்போது கள்ளச் சாராய மரணங்கள் தொடர்கதையாகியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் அங்கு கள்ளச் சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இனி கள்ளச் சாராய மரணங்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்காது என நிதிஷ் குமார் ஆவேசமாக சட்டப்பேரவையில் முழங்கினார். அதற்கு அப்போதைய எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்வினையாற்றியது.

அப்போது முதல்வர் நிதிஷ் அளித்த ஊடகப் பேட்டியில், “நீங்கள் குடித்தால் உயிரிழப்பது நிச்சயம். உங்களின் கெட்ட பழக்கத்தினால் ஏற்படும் விளைவுக்கு அரசு இழப்பீடு தராது” என்று கூறி விவாதங்களுக்கு வழி வகுத்தார். அப்போது சமூக ஆர்வலர்கள் பலரும் கூறியது “பூரண மதுவிலக்கு அல்ல... ஒழுங்குபடுத்தப்பட்ட தரமான மது விற்பனையும், மதுப் பழக்கம் பற்றி தொடர்ச்சியான விழிப்புணர்வும், கண்காணிப்பும் தான் சமூகத்தை சீராக்கும்” என்று தெரிவித்தனர். இது பிஹாருக்கு மட்டுமல்ல, குஜராத்துக்கு மட்டுமல்ல தமிழகம் உள்பட எல்லா சமூகங்களுக்கும் பொருந்தக் கூடியதே.

நிர்வாகத் தோல்வியை ஈடுகட்டுவதுதானே நியாயம்! - கள்ளச் சாராய மரணங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான விமர்சனங்கள் குறித்து குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், “இழப்பீடு, நிவாரணத் தொகை தொடர்பான விமர்சனங்கள் வேதனை தருகின்றன. கள்ளச் சாராயத்தை தடுப்பதற்குதான் மதுவிலக்கு அமலாக்கத் துறை உள்ளது. அந்தத் துறை சரியாக செயல்பட்டிருந்தால், காவல் துறை சரியாக இயங்கியிருந்தால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் கடமையைச் செய்திருந்தால் இந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்தே இருக்காது. இது முழுக்க முழுக்க அரசின் நிர்வாகத் தோல்வி. அதற்கு ஈடுகட்ட வேண்டியது அரசின் கடமைதான்.

உண்மையில், இந்தத் தொகை வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு மீண்டெழ உறுதுணையாக இருக்கும் தொகை. அந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணங்கள் வரவேற்கத்தக்கது. இந்த இழப்பீட்டைத் தாண்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயர் நீதிமன்ற சிட்டிங் நீதிபதி தலைமையிலான குழு கொண்டு விசாரணை நடத்த வேண்டும். கள்ளச் சாராயம் ஆண்டாண்டு காலமாக ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருக்கும் பிரச்சினை. விலையும் ஒரு பிரச்சினை என்றால் அதற்கு ஏற்றார்போல் குறைந்த விலையில் மது விற்பனையை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.

டாஸ்மாக் விலையில் திருத்தம் வருமா? - தினக்கூலி தொழிலாளர்கள் உடல் அலுப்பின் பேரில் மது உட்கொள்ள விரும்பினாலும் கூட அவர்கள் வாங்கும் கூலியில் டாஸ்மாக் மதுபானத்தை வாங்க முடியாத நிலையே உள்ளது. அதனால் குறைந்த செலவில் நிறைய போதை என்பதாலேயே பலர் கள்ளச் சாராயம் பக்கம் சென்று விடுகின்றனர். கள்ளச் சாராய வியாபாரிகளோ போதையை தூக்கலாக வழங்க முற்பட்டு அதனை விஷமாக்கி விற்றுவிடுகின்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளிலேயே மதுபான விலையை ஒழுங்குபடுத்தி விற்பனையை முறைப்படுத்துவது இத்தகைய கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்கும் என்பது அவர்களின் குரலாக இருக்கிறது.

இதனிடையே, “கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் பட்டியலின மக்கள். அவர்களுக்கு அரசு வழங்கும் மனிதாபிமான நிவாரண உதவியை அரசியலாக்கி விமரிசிப்பது சரியல்ல. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது,” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள சிறு விளக்கக் குறிப்பும் கவனிக்கத்தக்கது.

கட்சி - கள்ளச் சந்தை நெக்சஸ்: கள்ளக்குறிச்சி சம்பவ முதற்கட்ட விசாரணையில் மெத்தனால் தெலங்கானா மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்திவரப்பட்டு அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பகிர்ந்து விற்கப்பட்டுள்ளது. பின்னர் சிறு சிறு சாராய வியாபாரிகள் மெத்தனாலை மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கியுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையில் ஒரு தொழிலில் நிகழ்வது போல் சப்ளை - செயின் மேலாண்மை நடந்துள்ளது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலரும் இல்லாமல் இதற்கு வாய்ப்பில்லை என்பதே இச்சம்பவத்தினை கூர்ந்து நோக்கும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கள்ளச் சந்தைக்குள் புகுந்து கள்ளச் சாராய சட்டவிரோதச் செயலை சர்வ சாதாரண குடிசைத் தொழிலாக மாற்றியிருப்பதன் சாட்சியே மரக்காணம், கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள். நேற்று மரக்காணம், இன்று கள்ளக்குறிச்சி என்ற இந்த துயரம் நாளை வேறு ஒரு இடத்தில் தொடராமல் இருக்க வேண்டுமானால் இதனை ஒரு சமூகப் பிரச்சினையாக அணுக வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, முழு மதுவிலக்கு கோரி ஆளும் கூட்டணியில் உள்ள விசிக எனப் பல கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன. இவை அரசின் மீதான அழுத்தம் என்பதைவிட கூட்டுப் பொறுப்பின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்ளலாம்.

கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக அரசுக்கு புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் வினவியுள்ளது. இவையெல்லாம் இனியும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசுக்கு நெருக்குதலைத் தரக்கூடியவையே.

இந்தச் செய்தியைப் பதிவு செய்து கொண்டிருக்கும் இதே நேரம் தான், தமிழகத்தில் 2023-24 டாஸ்மாக் வருமானம் ரூ.45,855.67 கோடி என தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கொஞ்சம் கரிசனம் காட்டலாம்’ - ‘குடிகாரன் சாகட்டும்... குடித்து இறந்ததற்கு நிவாரண நிதியா?’ என்ற கொந்தளிப்புகள் சமூக வலைதளங்களில் கொப்பளிக்க, அதே தளத்தில் சிலர் ‘கொஞ்சம் கரிசனம் காட்டலாம்' என்ற வாதங்களையும் முன்வைத்துள்ளனர்.

"அந்தக் குடிகாரர்கள் வாழும்போது உழைத்த உழைப்பு, கட்டிய கட்டிடங்கள், விளைவித்த நெல்மணிகள் எந்த சிறந்த விருதாளர்கள் செய்த செயலையும் விட மதிப்புக்கு உரியவையே. எந்த விவசாயத் தொழிலாளிக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டது? எந்த கட்டிடத் தொழிலாளிக்கு சிறந்த கட்டிடத் தொழிலாளி விருது வழங்கப்பட்டது? எந்த சுமைதூக்கும் தொழிலாளிக்கு சிறந்த சுமைதூக்குநர் விருது வழங்கப்பட்டது?” என்ற பார்வையும் கவனிக்க வைக்கிறது.

“இன்றைய கிராமம் எதுவாயினும் அரசு இயந்திரம் வலுவாக உள்ளது. அப்படி இருக்க, அந்த இயந்திரம் நினைத்தால் கள்ளச் சாராயத்தைத் தடுக்க முடியாதா?” போன்ற சமுக வலைதள நிலைத் தகவல்கள் குடியால் நேர்ந்த மரணம் என்றாலும் இழப்பீடு சரியே என்று சமரசம் செய்து கொள்ளத் தூண்டுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x