Published : 21 Jun 2024 07:59 PM
Last Updated : 21 Jun 2024 07:59 PM
கள்ளக்குறிச்சி: “அப்பாவும், அம்மாவும் கஷ்டப்பட்டு உழைத்து எங்களைப் படிக்கவைத்தனர். அவர்கள் மறைந்ததால் எங்கள் வாழ்க்கைதான் இருட்டாகிவிட்டது; என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த அந்த 3 சிறுவர்களின் கண்ணீர், காண்பாரோ கலங்கடிக்கிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள், கோகிலா( 16), ஹரிஷ் (15), ராகவன் (14) இவர்கள் மூவரும் உடன்பிறந்தவர்கள். இவர்கள் மூவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் கசிந்த விழிகளுடன் காத்திருக்கிறார்கள். காரணம், இவர்களது பெற்றோரை கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் ஒருசேர காவு வாங்கிவிட்டது. பெற்றோருக்கு இறுதிக் காரியங்கள் செய்துவிட்டு அமர்ந்திருந்த தனது சகோதரர்களை தேற்றியபடி மூத்தவரான கோகிலா கூறியதாவது: “எங்க அப்பா சுரேஷுக்கு சின்ன வயதில் நடந்த விபத்தில், வலதுகை போய்விட்டது.
ஒரு கையை வைத்துக் கொண்டு பெயின்டர் வேலை பார்த்து எங்களைப் காப்பாற்றினார். எனது அம்மா வடிவுக்கரசி கூலி வேலைக்குச் செல்வார். அப்பாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அம்மாவுக்கு அந்தப் பழக்கம் இல்லை. ஆனால், அம்மாவும் இப்போது இறந்துட்டதால், அம்மாவும் குடிப்பாங்கன்னு உண்மை தெரியாமல் ஊருக்குள் பலரும் பலவிதமாக பேசுவது வருத்தமாக இருக்கிறது. முதல் நாள் அப்பா குடிக்கிறதுக்காக பாக்கெட் சாராயம் வாங்கி வைத்திருந்தார். அதை வழக்கமாக குடிக்கிற டம்ளரில் குடிக்காமல், வேறு டம்ளரில் ஊற்றி குடித்தார்.
காலையில் வேலைக்கு போகும்போது கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியை வைத்துவிட்டு சென்றார். உயரத்தில் ஏறி பெயின்ட் அடிக்கும்போது, பயம் தெரியாமல் இருப்பதற்காக, வேலைக்குப் போகும்போது, குடித்துவிட்டுப் போவதாக அப்பா சொல்வார். 60 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் கிடைப்பதால், எப்போதும் வீட்டில் வாங்கி வைத்திருப்பார். அன்றைக்கு வேறு டம்ளரில் ஊற்றிக் குடித்துவிட்டு மீதியை வைத்துவிட்டு சென்றிருந்தார்.
மூல நோயால் பாதிக்கப்பட்ட எங்க அம்மா வயிற்று வலி வந்து துடித்தார். அப்போது, அது சாராயம் என்று தெரியாமல் ஓம வாட்டர்னு எடுத்து குடித்துவிட்டார். இதில் கொடுமை என்னவென்றால், தெரியாமல் குடித்த எங்க அம்மா தான் முதலில் உயிரிழந்தார்; பிறகுதான் அப்பா உயிரிழந்தார். யாரு செய்த வினையோ தெரியவில்லை, எங்களுக்கு இப்போது எங்களை அதட்டிக் கண்டிப்பதற்கு அப்பாவும் இல்லை; அரவணைத்துக் கொள்ள அம்மாவும் இல்லை.
ஒரு நாளைக்கு வேலைக்குச் சென்றால் எங்கள் அப்பா 500 ரூபாயும், அம்மா 200 ரூபாயும் சம்பாதிப்பார்கள். அதில்தான், வாங்கிய கடனுக்கு கட்டும், வட்டியும் அசலும் போக மீதியை வைத்துதான் எங்கள் பிழைப்பு ஓடும். அதில்தான், எங்களையும் படிக்க வைத்தார்கள்.இப்போது எங்களுக்கென்று எதுவும் இல்லை. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்யப் போறோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் மட்டும் இல்லை, கருணாபுரத்துக்குள் இன்னும் நிறைய பிள்ளைகள் எங்களைப் போலவே நிற்கதியா நிற்கின்றனர்.
அரசிடம் நாங்கள் கேட்பது ஒண்ணே ஒண்ணு தான். எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை தூக்கில போடுங்கள்” அதற்கு மேல் பேச்சு வராமல் தம்பிகளை அணைத்தபடி அழுதார் அந்தச் சிறுமி. சிறுமியின் அந்த அழுகுரல் காண்போர் அனைவரையும் கலங்கடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT