Last Updated : 21 Jun, 2024 04:08 PM

 

Published : 21 Jun 2024 04:08 PM
Last Updated : 21 Jun 2024 04:08 PM

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு: தொடர்ந்து குடிநீர், மின்சாரம் வழங்கவும் ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் வசதிகளை தொடர்ந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘மாஞ்சோலை எஸ்டேட்டில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் 11.02.2028-ல் முடிகிறது. குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 7-க்கு முன்பு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்கள் பலர் நான்கு தலைமுறைகளாக அங்கு வசிக்கின்றனர்.

தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.எனவே, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகள், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு, கன்னியாகுமரி அரசு ரப்பர் கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் அங்கன்வாடிகளில் வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாற்றுப்பணி வழங்கும் வரை குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரி இருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில், மாஞ்சோலையைச் சேர்ந்த ஜான் கென்னடி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் டான்டீ (TANTEA) நிறுவனம் எடுத்து நடத்தி, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டாலும், தொழிலாளர்களை மாஞ்சோலை பகுதியில் இருந்து வெளியே அனுப்பினால் அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசின் டான்டீ நிர்வாகம் மாஞ்சோலையை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்தி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, தொழிலாளர்கள் மாஞ்சோலை பகுதியில் தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.

அரசு தரப்பில், “பிபிடிசி நிறுவனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பாக தேயிலைத் தோட்டத்தை காண்பித்து ரூ.50 கோடி வங்கியில் கடன் பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் எழுந்துள்ள பிரச்சினை காரணமாகவே பிபிடிசி நிறுவனம் குத்தகை காலம் முடியும் முன்பே மாஞ்சோலையில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளது.

கலைஞர் கனவு இல்ல திட்டம் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கும் வழங்கப்படுவது. ஏற்கெனவே இடம் இருப்பவர்கள் அல்லது முறையான வீடு வசதியில்லாதவர்கள் வீடு கட்டிக் கொள்ளும் விதமாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழக அரசின் டான்டீ நிறுவனம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலுமா என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்கப்படும்.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நோக்கத்தில் பிபிடிசி நிறுவனம் தரப்பிலிருந்து மாஞ்சோலை பகுதியில் மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை நிறுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். மாஞ்சோலை விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். மனு தொடர்பாக தமிழக அரசும், பிபிசிடி நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x