Published : 21 Jun 2024 03:06 PM
Last Updated : 21 Jun 2024 03:06 PM

மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? - அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை

சென்னை: மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மோகன்ராஜ், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதில் இருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து வந்த 25 காவலர்களை இடமாற்றம் செய்தார்.

கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த மோகன்ராஜ், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச் சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மோகன்ராஜ், ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும்போதே விருப்ப ஓய்வில் சென்றதற்குக் காரணம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச் சாராய மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும், அவரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்தப் பகுதி திமுக முக்கியப் புள்ளிகள் மிரட்டியுள்ளதாகவும், காவல்துறை தலைமையும் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்பதால், வேறு வழியின்றி விருப்ப ஓய்வில் சென்றார் என்றும் தற்போது செய்தி வெளியாகி உள்ளது.

உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணி உண்மையான வருத்தம் இருக்குமேயானால், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜை மிரட்டிய திமுக முக்கியப் புள்ளிகள் யார் என்பதையும், இதனை அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் யார் என்பதையும் விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், எல்லாம் தெரிந்திருந்தும், தன் கட்சியினரைக் காப்பாற்ற பொதுமக்களைப் பலி கொடுத்த முதல்வர் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

அதற்கு முதற்படியாக, நாங்கள் ஏற்கெனவே கூறியது போல, சுமார் ஐம்பது உயிர்கள் பறிபோனதற்குப் பொறுப்பேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x