Last Updated : 21 Jun, 2024 02:34 PM

 

Published : 21 Jun 2024 02:34 PM
Last Updated : 21 Jun 2024 02:34 PM

கள்ளச் சாராய சம்பவத்தைக் கண்டித்து பாமக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை கண்டித்து பாமக, பாஜக கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கேள்வி நேரத்தில் கள்ளச் சாராய விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து பாமக, பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, “கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சுடுகாட்டில் சாராயம் விற்றார்கள் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய்யாகும். கள்ளச் சாராய உயிரிழப்புகள் இதற்கு முன்பாக செங்கல்பட்டு, மரக்காணத்தில் நடைபெற்றது. தற்போது கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது.

கள்ளச் சாராயத்தால் உடனடியாக உயிரிழக்கின்றனர். டாஸ்மாக் சாராயத்தால் மெல்ல உயிரிழக்கின்றனர். இதையொட்டியே பாமக கடந்த 44 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறது. எனவே தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால் மட்டும் என்ன பயன்?. இதனால் ஒன்றும் நடக்காது. அதிகாரிகளை மாற்றம் செய்திருப்பதால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது.

அதேபோல டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் சாராயம் சந்துக் கடைகள் என்ற பெயரில் அனைத்து தெருக்களிலும் கிடைக்கின்றன. இங்கும் கள்ளச்சாராயம் விற்கப்படுகின்றன.

ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம் வேண்டும் என பெரியார் சொல்லியிருக்கிறார். பெரியார் வழியில் நடைபெறும் ஆட்சியில் பூரண மதுவிலக்கு வேண்டும். நமது நாடு மதசார்பற்ற நாடு. அனைத்து மதங்களும் மது கூடாது என்றே கூறுகின்றன. பின் ஏன் டாஸ்மாக் கடைகளை நடந்த வேண்டும். மக்கள் நலனை காக்க மதுவை ஒழிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன், "திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கள்ளச் சாராயத்தால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 115 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

திமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கள்ளச் சாராயம் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் முன்பு இதுபோல வேறு சில இடங்களில் நடந்ததை பற்றி சுட்டிக்காட்டி கொண்டிருக்கின்றனர். இது வருத்தமான விஷயமாகும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x