Published : 21 Jun 2024 01:40 PM
Last Updated : 21 Jun 2024 01:40 PM
தருமபுரி: தன் மீதான கெட்ட பெயரை அரசு தடுக்க நினைத்ததால் தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்துள்ளது என சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பாமக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தருமபுரி ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் சவுமியா அன்புமணி, அந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பாமக மீதும், பாமக கூட்டணி கட்சிகள் மீதும் மதிப்பு வைத்து நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது பாமக வேட்பாளரான எனக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் கட்சி சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பங்களிப்பை தருவோம். தமிழக அரசு தன் மீதான கெட்ட பெயரை தடுக்க நினைத்ததால் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பே நடந்துவிட்ட நிலையில், உரிய நேரத்தில் இது குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்திருந்தால் கள்ளச்சாராயம் குடித்து வீட்டில் முடங்கிக் கிடந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருப்பார்கள். இதன் மூலம் உயிரிழப்புகளை குறைத்திருக்க முடியும். அரசு மீது கெட்ட பெயர் ஏற்பட்டாலும் பரவாயில்லை மக்களின் உயிரை காப்பதற்கான முயற்சி இது என எண்ணி அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை உயிர்களை இழந்திருக்க மாட்டோம்.
கெட்ட பெயரை தடுப்பதற்காக மக்களை அரசு பலிகடா ஆக்கியுள்ளது. இது போன்ற கள்ளச்சாராய சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன. நல்ல சாராயம், கள்ளச் சாராயம் என எதுவுமே நமக்கு வேண்டாம். அரசே சாராயம் விற்பதன் மூலம் பல விதவைகள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். இதர போதைப் பொருட்களின் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள், மாணவர்கள் என போதை பழக்கம் தலைவிரித்தாடுகிறது. இவற்றையெல்லாம் அரசு ஒழிக்க வேண்டும்'' என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது, பாமக கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம், பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில நிர்வாகி மாது மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT