Published : 21 Jun 2024 01:13 PM
Last Updated : 21 Jun 2024 01:13 PM
உதகை: கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜின் செல்போனுக்கு வெளிநாட்டு செல்போன் எண்ணிலிருந்து ஐந்து முறை அழைப்பு வந்திருப்பதால் இந்த வழக்கில் இன்டர்போல் போலீஸாரை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்தக் கும்பல் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
இது தொடர்பாக சோலூர் மட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 ஆண்டுகளாக இவ்வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு மீண்டும் தொடக்கத்தில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய், தீபு உட்பட அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ-வான ஆறுகுட்டி உட்பட இதுவரை 167 பேரிடம் தனிப்படை போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் ஜித்தின் ஜாய் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி-யான முருகவேல் தலைமையில் போலீஸார் ஆஜராகினர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகான், “கோடநாடு கொலை நடந்த ஓரிரு நாட்களில் கனகராஜின் செல்போனிற்கு வெளிநாட்டு செல்போண் எண்ணில் இருந்து ஐந்து முறை அழைப்பு வந்துள்ளது. யார் அவரை அழைத்தார்கள், எதற்காக அவரை அழைத்தார்கள் என்பது குறித்து இன்டர்போல் போலீஸாரைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அத்துடன் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, கொலை நடந்த இடத்தில் ஆய்வு நடத்துவது சரியாக இருக்காது” எனத் தெரிவித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி அப்துல் காதர், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT