Last Updated : 21 Jun, 2024 12:06 PM

1  

Published : 21 Jun 2024 12:06 PM
Last Updated : 21 Jun 2024 12:06 PM

“யோகா முக்கியத்துவத்தை கோயில் சிற்பங்களின் வாயிலாகவும் அறியலாம்” - புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: “இறைவனே யோகாவை வலியுறுத்தியிருக்கிறார். யோகா எவ்வளவு முக்கியமானது என்பதை திருக்கோயில்களில் உள்ள சிற்பங்களின் வாயிலாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும்” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஆயுஷ் இயக்குநரகம், புதுச்சேரி மாசுக் கட்டுபாட்டுக் குழுமம் ஆகியவை இணைந்து நடத்திய 10-வது சர்வதேச யோகா தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இன்று காலை நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி விழாவினைத் தொடங்கி வைத்து பேசியதாவது: நோய் இருந்தால் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்காது. நோயற்ற வாழ்வு வாழ மிக முக்கியமானது யோகா. மனதின் கட்டுப்பாட்டில் உடலை கொண்டு வர யோக கலையால் மட்டுமே முடியும்.

இந்த யோகா செயல்விளக்கத்தில் கலந்துகொண்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த அளவிற்கு பயிற்சி எடுத்து யோகாவை சிறந்த முறையில் செய்து காட்டினார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. யோகாவை கலையாக நினைத்து சிரமம் பாராமல் பயிற்சியில் ஈடுபடும்போது நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். யோகா செய்பவர்கள் மூச்சுத் திணறல் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

வயதானாலும் பார்ப்பதற்கு வயது குறைந்தவர்களாகவே இளமையாக இருப்பார்கள். அதற்குக் காரணம், யோகப்பயிற்சி ஆகும். யோகாப் பயிற்சியின் மூலம் மனதைக் கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் கிடைக்கின்றது. இந்த யோகாவை சர்வதேச அளவில் பிரசித்திபெற செய்தவர் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி. நமது கோயில்களில் உள்ள சிற்பங்கள் யோகாசன நிலைகளில் உள்ளன.

கோயில்களில் இறைவன் எந்த வடிவில் இருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது யோகாவின் தொன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இறைவனே யோகாவை வலியுறுத்தியிருக்கிறார். யோகா எவ்வளவு முக்கியமானது என்பதை திருக்கோயில்களில் உள்ள சிற்பங்களின் வாயிலாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இதற்கான அடிப்படை நம்முடைய தமிழகத்தில் தான் இருக்கிறது.

சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் எல்லாம் யோகாவின் மூலமாகத்தான் மனதை கட்டுக்குள் வைத்திருந்தனர். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் யோக கலையை நாம் கலையாக நினைத்து தினமும் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் சிறுதானிய உணவு உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கக் கூடியது. உணவுக் கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று. சரியான நிலையில், சரியான நேரத்தில் உணவு உண்பது என்பது உடலை ஆரோக்கியமாக்க வைத்திருக்க உதவும். நாம் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். ஆகவே அனைவரும் யோகக் கலையை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் தங்களுடைய உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமசிவாயம், லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவை ஒட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் முக்கிய நிகழ்வாக யோகா வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற பெருந்திரள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x