Published : 21 Jun 2024 11:53 AM
Last Updated : 21 Jun 2024 11:53 AM
கோவை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் யோகா தின நிகழ்வுகள் இன்று (ஜூன் 21) காலை ஈஷா சார்பில் நடத்தப்பட்டது.
ஆதியோகி முன்பு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடத்தப்பட்ட நிகழ்வில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) எனப்படும் துணை ராணுவப்படை வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தினர் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த யோகா நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா உள்ளிட்ட யோக பயிற்சிகளை கற்றுக் கொடுத்தனர். வீரர்கள் அந்த யோக பயிற்சியை திரும்பச் செய்தனர்.
இதுகுறித்து ஈஷா அமைப்பினர் கூறும்போது, “சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு யோக பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டது.
நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இலவச யோக வகுப்புகளை மிகப்பெரிய அளவில் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது. இந்தாண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது.
அதேபோன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, ஐஎன்எஸ் அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், சிஆர்பிஎஃப் மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்ஃபோசிஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைப்பெற்றன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT