Published : 21 Jun 2024 11:26 AM
Last Updated : 21 Jun 2024 11:26 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள், நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் நேற்று மாலையே 27 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்த தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக ஆட்சியர் கூறியிருந்தார். எஞ்சியுள்ளவர்களுக்கும் படிப்படியாக நிவாரணத் தொகை ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆணையம் விசாரணை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ், இச்சம்பவத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் இன்று (வெள்ளிக்கிழமை) கேட்டறிந்தார் அதையடுத்து கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.
சிபிசிஐடி விசாரணை வளையத்தில் முக்கிய நபர்கள்: கள்ளச்சாராய வழக்கில் முக்கிய நபர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த சிபிசிஐடி.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட தமிழக அரசு, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. அதன் பேரில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு நேற்று விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை தொடர்ந்து கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி புதுச்சேரியை தேர்ந்த ஜோசப் என்கிற ராஜாவையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த சிபிசிஐடி, இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மாதேஷ் என்பவரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT