Published : 21 Jun 2024 10:47 AM
Last Updated : 21 Jun 2024 10:47 AM

“பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்” - தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று (ஜூன் 20) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

எனவே அவரது உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x