Published : 21 Jun 2024 09:24 AM
Last Updated : 21 Jun 2024 09:24 AM

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம்: 30 பேர் கவலைக்கிடம் - ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45+ ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 47 பேர் உயிரிழந்துள்ளதாக ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் 50 முதல் 60 பேர் வரை உடல்நலம் சிறப்பாக தேறியுள்ளது. 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு சிறந்த மருத்துவர்களின் உதவியுடன் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒருவருக்கு மட்டுமே இன்னும் பார்வை சவால் உள்ளது.

கள்ளக்குறிச்சியில் யாரேனும் அண்மையில் சாராயம் அருந்தி உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தால் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சாராயத்தால் ஏற்பட்ட உடல் உபாதைகளை மறைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதவிர உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் முதல்வரின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் தொடர்பில் இருக்கின்றனர். அந்தக் குடும்பங்களில் பாதிக்கப்பட்டோருக்கு என்ன மாதிரியான உதவிகளை அரசு செய்யக் கூடும் என்று கணக்கெடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களில் கல்வி பயில்வோருக்கு என்ன உதவி செய்யலாம், வேறு கடன் ஏதும் உள்ளதா? அரசு நலத்திட்டங்களில் எந்தெந்த திட்டங்களின் கீழ் எல்லாம் அவர்களுக்கு உதவி செய்யலாம் என கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x