Published : 21 Jun 2024 08:44 AM
Last Updated : 21 Jun 2024 08:44 AM
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில், கள்ளச்சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
காவல் துறையினருக்குத் தெரிந்தே, சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறது. எனவே, மாநில காவல் துறை மூலம் விசாரணை நடத்தினால், உண்மைகள் வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குழந்தைகள் கல்வி பயில நிதியுதவி வழங்கப்படும். நகரின் மையப் பகுதியில் கள்ளச் சாராய விற்பனை நடந்துள்ளது. அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. கள்ளச் சாராய விவகாரம் தொடர்பான விவரங்களை சேகரித்து, அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT