Published : 21 Jun 2024 08:13 AM
Last Updated : 21 Jun 2024 08:13 AM

கண்ணீரும் கம்பலையுமாக கள்ளக்குறிச்சி - தலைவர்கள் வலியுறுத்துவது என்ன?

தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: கள்ளகுறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கடந்த ஆண்டு மரக்காணம், மதுராந்தகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்தபோதே, கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சி சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.

அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளரான எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர், கள்ளச் சாராய வழக்கில் கைது செய்தவர்களை விடுவிக்குமாறு காவல் துறையினரிடம் கூறியுள்ளனர். மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதாக அரசு அறிவிக்க வேண்டும்.

மக்கள் உயிரிழப்பை ஏற்க முடியாது : செல்வப்பெருந்தகை கருத்து

செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அதற்குள்ளாக கள்ளக்குறிச்சியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காவல் துறை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கள்ளச் சாராய வியாபாரிகள் திமுகவுடன் தொடர்பு : பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தபோதே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கள்ளச் சாராய விற்பனையைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதை செய்யவில்லை.

கள்ளச் சாராயம் காய்ச்சுவோரை காவல் துறையினர் கைது செய்தாலும், அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர்கள், எம்எல்ஏ-க்கள்வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தலையீட்டால், கைதானவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

இதனால் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல் துறையால் கடும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குக் காரணமாக சாராய வியாபாரி கோவிந்தராஜ் என்பவருக்கும், திமுக எம்எல்ஏக்களுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது உறுதியாகியுள்ளது.

கள்ளச்சாராய ஒழிப்பில் திமுக அரசு தோல்வி : ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

சென்னையில் செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: கள்ளச்சாராய ஒழிப்பில் அரசு தோல்வியடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஏற்கெனவே கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்ட பிறகும், இதைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போதைக்கு எதிரான போரில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன். தமிழகத்தில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்களையும் உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்ட வேண்டிய தருணம் இது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அரசின் அலட்சியத்தை காட்டுகிறது: விஜய் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று மாலை சந்தித்து ஆறுதல் கூறினார். தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற விஜய், அங்கு சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘ கடந்த ஆண்டும் இதுபோன்ற நிகழ்வு காரணமாக பல உயிர்களை இழந்த நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இனியாவது தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய குறிச்சியாக மாறிய கள்ளக்குறிச்சி: தமிழிசை

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கள்ளங்கபடம் இல்லாத கள்ளக்குறிச்சியை கள்ளச்சாராய குறிச்சியாக மாற்றியதுதான் திராவிட மாடல் ஆட்சி. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை நினைத்து வேதனை அடைகிறேன். கவலைக்கிடமாக இருப்பவர்களை நினைத்து கவலை அடைகிறேன். அவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயமோ.. எந்த சாராயமோ.. இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்.

அரசின் அலட்சியமே காரணம்: ஜி.கே வாசன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறிய தமாகா தலைவர் ஜி.கே வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கள்ளச் சாராயம் கிடைக்கிறது. காவல் நிலையம் அருகிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது, அரசின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது. கள்ளச் சாராய உயிரிழப்புகளின் பின்புலத்தில் இருக்கும் நபர்களைக் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

‘போதை பொருள் விற்பனை அதிகரிப்பு’ - பிரேமலதா

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கள்ளச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களில் பலர் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர். தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை அந்த நிலை ஏற்படவில்லை. என்னை சந்திக்கும் பெண்கள் பலர், டாஸ்மாக்கை மூட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தேர்தல் அரசியல் மட்டுமே தமிழகத்தில் நடைபெறுகிறது.
எந்த நிகழ்ச்சியானாலும் அங்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், இங்கு இவ்வுளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் வராதது ஏன்? எனவே, பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்கவேண்டும்.

முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: மதிமுக பொது செயலாளர் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், மதுக் கடைகளையும் படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை கண் துடைப்பு நாடகம்: சீமான் குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: கள்ளச் சாராயத்தை திமுக அரசு தடுக்கத் தவறிவிட்டது. தொழில்போட்டி காரணமாக கள்ளச் சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போட்டி போட்டு விற்கப்படும் அளவுக்கு கள்ளச் சாராய புழக்கம் அதிகரித்தது எப்படி?

காவல் துறையால் தடுக்க முடியாத கள்ளச் சாராய விற்பனையை, சிபிசிஐடி தடுக்க முடியும் என்பதும் வேடிக்கையானது. கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்கள் குறித்து விசாரிக்க திமுக அரசு நியமித்த சிபிசிஐடி விசாரணை என்னவானது? அதன் பிறகும் கள்ளச் சாராயத்தால் இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளது என்றால், சிபிசிஐடி விசாரணை என்பதே கண் துடைப்பு நாடகம்தான் என்பது தெளிவாகிறது. இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

முழுமையான விசாரணை அவசியம்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராய வியாபாரம் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சட்டவிரோத செயல்கள் மாவட்ட வருவாய்த் துறை மற்றும் காவல் நிர்வாகத்தின் ஆதரவோடு நடந்து வருவது, இந்த துயரச் சம்பவத்தின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கள்ளச்சாராய விற்பனை குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, இதில் தொடர்புள்ள எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

சாராயத்தை ஒழிப்பதில் அரசுக்கு ஆர்வமில்லை: பாரிவேந்தர் கண்டனம்

இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்ட அறிக்கை: ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளிலேயே ஏராளமான கள்ளச்சாராய மரணங்கள் நேரிட்டுள்ளன. ஏற்பட்டு, தமிழக அரசு எதிர்கட்சியினரை அடக்குவதில் காட்டும் ஆர்வத்தை, கள்ளச் சாராயத்தை ஒடுக்குவதிலும், முற்றிலுமாக ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்ட அறிக்கையில், ‘‘எதிர்கால தலைமுறையை மிகக் கடுமையாக பாதிக்கும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்கவும், கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கவும் தமிழக அரசு முன்வரவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x