Published : 24 May 2018 11:52 AM
Last Updated : 24 May 2018 11:52 AM
தூத்துக்குடி தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் சார்பாக நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி மாநில திமுக அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (மே 25) மாவட்ட தலைநகரங்கள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் நேற்று திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய குடியரசுக் கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் புதுச்சேரியில் நாளை (மே 25) காலை சுதேசி காட்டன் மில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டு புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக முடிவு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தெற்கு மாநில அமைப்பாளர் எம்எல்ஏ சிவா இன்று கூறியதாவது:
''தூத்துக்குடியில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினர்களைப் பார்க்க வந்தவர்கள் மீதும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்று, இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். பொதுமக்கள் மீது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் தமிழக அரசின் மீது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல- ஒட்டுமொத்த தமிழக, புதுச்சேரி மக்களும் ஆத்திரத்திலும், கடும் கோபத்திலும் இருக்கிறார்கள்.
தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், அதிமுக அரசின் அலட்சியத்தால் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ள விபரீதமான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டு நாளை ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இப்போராட்டத்துக்கு புதுச்சேரி மாநிலத்தில் திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT