Last Updated : 20 Jun, 2024 08:18 PM

 

Published : 20 Jun 2024 08:18 PM
Last Updated : 20 Jun 2024 08:18 PM

கள்ளக்குறிச்சி சம்பவங்கள் தொடர வேண்டுமா? - காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை: “திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கள்ளக்குறிச்சி சம்பவங்கள் தொடர வேண்டுமா?” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துகுமார். இவரை கடந்த வாரம் ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இது தொடர்பாக திண்டுக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான சிலர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் தரப்பில், மனுதாரர்களுக்கு ஜாமீன், முன்ஜாமீன் எதுவும் வழங்கக்கூடாது. தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் குற்றவாளிகள் சட்டவிரோதமாக, திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் 24 மணி நேரம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீஸில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான வீடியோக்கள் நீதிபதியிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் இதுபோன்ற நடவடிக்கைகளை காவல் துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? இதுபோல் காவல் துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டதால்தான் கள்ளக்குறிச்சியில் பலர் இறந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர வேண்டுமா? சட்ட விரோத மது விற்பனையை பொதுமக்களே சென்று வீடியோ, புகைப்படம் எடுத்து கொடுத்த பிறகும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்தச் சம்பவத்தில் காவல் துறை என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது? குற்றவாளிகளுக்கு உதவியாக உள்ள காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?” என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில், சட்டவிரோத மது விற்பனையில் தொடர்பு உள்ளவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன காவல் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x