

பொள்ளாச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவுகளைக் காரணம்காட்டி போலீஸார் தங்களை துன்புறுத்துவதாக கள் இறக்கும் பொள்ளாச்சி விவசாயிகள் இன்று டிஎஸ்பி-யிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்து இதுவரை 35-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகம் எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் சிலர் தடையை மீறி தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து, போலீஸார் கள் இறக்கி விற்பனை செய்யும் விவசாயிகளை கள் இறக்குவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று போலீஸார் தங்களை துன்புறுத்துவதாகக் கூறி டிஎஸ்பி-யான ஜெயச்சந்திரனிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்துக்காக நீரா மற்றும் கள் இறக்கி வருகிறோம். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தையும் விவசாயிகள் கள் இறக்குவதையும் இணைத்து போலீஸார் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
கள் இறக்கும் பனையை அகற்ற வேண்டும், இல்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டூர், ஆனைமலை மற்றும் புளியம்பட்டி பகுதி விவசாயிகளை மிரட்டி நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 2009-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் கள்ளுக்கு அனுமதி வேண்டும் என போராடி வருகிறோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்றால் தமிழக அரசு முதலில் மதுக்கடைகளை மூட வேண்டும்.
அதன் பின்னர் விவசாயிகளிடம் கள் இறக்க வேண்டாம் என தெரிவிக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் கள் இறக்குவதையோ, கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டத்தையோ நாங்கள் கைவிட போவதில்லை. நேற்று (ஜூன் 19) விவசாயி ஒருவரின் தென்னந்தோப்புக்கு சென்ற போலீஸார், அவரிடம் தீவிரவாதி போல் விசாரணை நடத்தி உள்ளனர். இனி போலீஸார் கள் இறக்கும் விவசாயிகளை தொந்தரவு செய்தால் பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு கள் இறக்கி விற்பனை செய்வோம்” என்றனர்.