Published : 20 Jun 2024 05:05 PM
Last Updated : 20 Jun 2024 05:05 PM

கள்ளச் சாராய உயிரிழப்பு | 1,000 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் உத்தரவிட வேண்டும் - அண்ணாமலை

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்

கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உயிருக்கு மதிப்பளித்து, தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மேலும், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று (வியாழக்கிழமை) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கள்ளச் சாராயமும், திமுகவின் அடிமட்டத்தில் இருக்கின்ற தலைவர்களும் பின்னிப்பிணைந்திருக்கிறார்கள். இன்று கள்ளக்குறிச்சிப் பகுதியில், காவல் துறையினர் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. அந்த வீட்டில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளும் இருக்கிறது. இந்த சம்பவம் ஏதோ கிராமப்புறத்திலோ அல்லது மலைப்பகுதியிலோ நடைபெறவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மையப்பகுதியில் நடந்துள்ளது.

காவல் நிலையத்தில் இருந்து 150 மீட்டர், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்வளவு பக்கத்தில் இருக்கின்ற பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. மருத்துவர்களிடம் பேசும்போது, யாரெல்லாம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள், இரண்டு மூன்று நாட்களாக அவர்கள் கள்ளச் சாராயம் அருந்தியிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். புதன்கிழமை காலை 6.10 மணிக்கு முதல் உயிர் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வசாதரணமாக கள்ளச்சாரயம் இந்தப் பகுதியில் புழங்கியிருப்பது தெரியவருகிறது.

எனவே, தமிழக பாஜக இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். காரணம், மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்தபோதே, அச்சம்பவத்தில் தொடர்புடைய மருவூர் ராஜாவுக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தோம். அந்த தொடர்பை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தோம். ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்தமுறை தமிழக முதல்வர் இதுதான் கடைசி மரணம் என்று கூறினார். ஆனால், கள்ளக்குறிச்சியில் இன்று 38-ஐ தாண்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 140-க்கு மேற்பட்டவர்கள் இந்த மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். நான் பார்த்தவரையில், 15 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், முதல்வர் வருத்தம் தெரிவித்து ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

குறைந்தபட்சம், தார்மிக பொறுப்பேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 18-லிருந்து 22 சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்துள்ளது. எனவே, முதல்வர் தார்மிக பொறுப்பேற்று மதுவிலக்கு கொள்கையை அமைக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் உயிர்களுக்கு மதிப்புக் கொடுத்து முதல் கட்டமாக தமிழகத்தில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக, நாளை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஒரு அரசு டாஸ்மாக் கடைகளை நடத்துவதற்கு தார்மிக உரிமை இல்லை. திமுக எம்பிக்கள் உள்ளிட்ட சிலர் நடத்தும் சாராய ஆலைகளின் நலனுக்காக டாஸ்மாக் நடத்தப்படுகிறது.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x