Published : 20 Jun 2024 03:27 PM
Last Updated : 20 Jun 2024 03:27 PM
புதுச்சேரி: மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒழுங்கு முறை ஆணையத்தை நாடுகிறது புதுச்சேரி அரசு.
புதுச்சேரியில் நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் அரசின் மின்துறை கடந்த மார்ச்சில் அறிக்கை சமர்பித்ததது. இதையடுத்து கருத்து கேட்பு கூட்டமும் நடந்தது. வீட்டு மின் இணைப்பு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம், நிலைக்கட்டணம் உயர்த்த அனுமதி கேட்டது.
அதில், வீட்டு மின் உபயோகத்தில் யூனிட்டுக்கு 45 பைசாவில் இருந்து 75 பைசா வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கவும், நிலைக்கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிலைக்கட்டணத்தை ரூ. 75ல் இருந்து ரூ. 200 ஆக உயர்த்தவும் அனுமதி தந்தனர். இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள். பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், மின்கட்ட நிலுவைத்தொகை ரூ. 500 கோடியை மின்துறை வசூலிக்க வில்லை என்றும் குற்றச்சாட்டுகள் பலமாக அதிகரித்தது. போராட்டங்களும் நடந்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரியில் மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பாக மின்துறை உயர் அதிகாரிகளிடம் இன்று கேட்டதற்கு, "புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அமலுக்கு வந்தது நிறுத்தி வைக்கப்படுகிறது. உயர்ந்த மின் கட்டணத்தை மாற்றம் செய்ய ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் கேட்க முடிவு எடுத்துள்ளோம். ஆணையம், அளிக்கும் அனுமதி பொறுத்துதான் திருத்தப்பட்ட மின்கட்டணம் அமலாகும்” என அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT