Published : 20 Jun 2024 03:12 PM
Last Updated : 20 Jun 2024 03:12 PM
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2,327 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: உதவி தொழிலாளர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் 507 காலியிடங்கள் குரூப்-2 தேர்வு வாயிலாகவும், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், வணிகவரி உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் 1,820 காலியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு வாயிலாகவும் (மொத்தம் 2,327) நிரப்பப்பட உள்ளன.
இதற்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பாரஸ்டர், ஆவின் விரிவாக்க அலுவலர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பதவிகளுக்கு மட்டும் பட்டப்படிப்புடன் கூடுதல் தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதேபோல், வயது வரம்பும் பணிகளுக்கு ஏற்பவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஏற்பவும் மாறுபடும்.
முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (ஜூன் 20) தொடங்கி ஜூலை 19-ம் தேதி முடிவடைகிறது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில், 'ஒரு காலியிடத்துக்கு 10 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வு குரூப்-2 பணிகளுக்கு தனியாகவும், குரூப்-2-ஏ பதவிகளுக்கு தனியாகவும் நடத்தப்படும். தகுதியுள்ள பட்டதாரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஜூலை மாதம் 19-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
என்னென்ன பதவிகள், அவற்றுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்குரிய பாடத்திட்டம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT