Last Updated : 20 Jun, 2024 02:56 PM

2  

Published : 20 Jun 2024 02:56 PM
Last Updated : 20 Jun 2024 02:56 PM

“கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்” - கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. 

கோவை: “கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் வியாழக்கிழமை (ஜூன் 20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்தாண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தால் 23 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஒரு வருடத்துக்குள் கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச் சாராயத்தால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு முழுப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்.

மேலும், அரசே மதுக்கடை நடத்தி சாராயம் விற்பதை நிறுத்தி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரத்தின் மேல்மட்டம் முதல் கீழ்நிலை வரை அனைவருக்கும் தெரிந்தே சட்டவிரோத மது விற்பனையும், கள்ளச் சாராய விற்பனையும் நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து முதல்வர் விலகிக் கொள்ள முடியாது. கள்ளச் சாராய விற்பனையை தடுக்கத் தவறிய காவல்துறையை கையில் வைத்திருப்பவர் என்ற அடிப்படையில் முழு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்.

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெயரில் இயங்கி வரும் மது ஆலைகள் மூடப்பட வேண்டும். அரசு அதிகாரிகளே கட்சிக்காரர்கள் போல் செயல்படுவதை நிறுத்திவிட்டு போதைப் பொருள் ஒழிப்பு விவகாரத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும்.

சாதி பாகுபாட்டினை பள்ளிகளில் ஒழிக்கும் வகையில் நீதிபதி சந்துரு சமர்ப்பித்துள்ள பரிந்துரையின் சில முக்கிய பரிந்துரைகள் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பாக, பள்ளி மாணவர்கள் கையில் சாதிய அடையாளத்துடன் கயிறுகள் கட்டக்கூடாது, நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, பள்ளிகளின் பெயரில் சாதி நீக்கப்பட வேண்டும் ஆகியவை வரவேற்கப்படக்கூடிய பரிந்துரைகளாக உள்ளன.

இவை அனைத்தும் சாதிய மனநிலையை பள்ளிப் பருவத்திலேயே அகற்றிடச் செய்யும். எனவே, தமிழக அரசு நீதிபதி சந்துருவின் பரிந்துரையை முழுவதுமாக ஏற்று அதனை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x