Published : 20 Jun 2024 03:05 PM
Last Updated : 20 Jun 2024 03:05 PM

கள்ளச் சாராய விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்க: விசிக சட்டமன்ற தலைவர் சிந்தனைச் செல்வன்

சிந்தனைச் செல்வன் | கோப்புப் படம்

சென்னை: கள்ளச் சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என சட்டமன்ற விசிக தலைவர் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கள்ளச் சாராயத்துக்கான வேதிப் பொருளை தயாரிப்பது, விநியோகிப்பது, அதற்கு துணைபோவது போன்ற கட்டங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில், கள்ளச்சாராயம் விற்றவரை மட்டும் கைது செய்திருப்பது போதுமானதல்ல. இதை தயாரித்தவர் யார், யார் விநியோகித்தார், தடுக்கத் தவறியது யார் ஆகிய கேள்விகள் எழுந்துள்ளன.

இளைஞர்களை போதையில் இருந்து மீட்க வேண்டும் என்ற உன்னத நோக்கில், அவர்களது கல்வி, நலன், விளையாட்டுத்திறன் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான சிறந்த முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

இச்சூழலில், ஆளும் அரசின் நோக்கத்துக்கு எதிரான திசையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளன. இதுவரை பல்வேறு விஷச்சாராய சம்பவம் நிகழ்ந்த சூழலில், சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்ற அடிப்படையில் உடனடியாக காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஆறுதலளிக்கிறது.

அதே சமயம், உளவுத்துறை அதிகாரி மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் மிஞ்சி நிற்கிறது. காவல் நிலையத்துக்கு அருகே சிறு தூரத்தில் நடந்த வெளிப்படையான இந்நிகழ்வில் உளவுத்துறையின் தோல்வி பெருமளவில் எடுக்கிறது. பணியிடை நீக்கம் என்பது தண்டனை அல்ல என்பதை நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

எனவே, அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். இந்திய அளவில் விஷச்சாராய சாவுகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டது என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும்.

போதையில்லா தமிழகம் என்ற முதல்வரின் தூய்மையான நோக்கத்துக்கு இடையூறாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 100 சதவீதம் போதையில்லா தமிழகத்தை உறுதிப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x