Published : 20 Jun 2024 02:18 PM
Last Updated : 20 Jun 2024 02:18 PM
சென்னை: “தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது” என கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்கள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சமீபகாலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT