Published : 20 Jun 2024 12:52 PM
Last Updated : 20 Jun 2024 12:52 PM

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: இபிஎஸ்

கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “வேதனையான சூழல் இது. கள்ளச் சாராயம் பருகி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு அதிகமான பேர் பாதிக்கப்பபட்டுள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழைகள். மாவட்ட தலைநகரில் காவல் நிலையத்துக்கு பின்புறமே சாராயம் விற்கப்படுகிறது. அப்படியெனில் திமுக ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

கள்ளச் சாராய விற்பனைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்களே இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இல்லையெனில் இவ்வளவு துணிச்சலாக கள்ளச் சாராய விற்பனை நடைபெறுமா?.

இதற்கு முன் விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்தபோதே அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வலியுறுத்தினேன். ஆனால் ஆளும் அரசு சிபிசிஐடி வசம் வழக்கை ஒப்படைத்தது. ஆனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவம் நடந்த உடன் வீர வசனம் பேசுகிறார்கள். பிரச்சினை முடிந்த பின் அதோடு விட்டுவிடுகிறார்கள்.

இங்கே சிகிச்சை பெறுபவர்கள் இன்னும் எத்தனை பலியாவார்கள் எனத் தெரியவில்லை. கள்ளச் சாராய உயிரிழப்புகளை பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ கள்ளச் சாராய விற்பனை குறித்து புகார் அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் துறை முதல்வர் வசம் உள்ளது. இருந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது.

திருச்செங்கோடு அருகே திமுக நிர்வாகி கள்ளச் சாராயம் விற்பனை செய்கிறார். போதைப்பொருள் விவகாரத்தில் பின்புலமாக திமுக தான் உள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். அது தான் பொருத்தமாக இருக்கும்.

மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு இது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் தான் முக்கியம். வாக்களித்த மக்களோ, நாட்டு மக்கள் மீதோ அவருக்கு கவலை இல்லை.” ன்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x