Published : 20 Jun 2024 12:30 PM
Last Updated : 20 Jun 2024 12:30 PM

''மாணவர்கள் திலகமிட தடையா?'' - நீதிபதி சந்துரு குழு அறிக்கைக்கு இந்து முன்னணி கண்டனம் 

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் | கோப்புப் படம்.

சென்னை: தெய்வீகத் தமிழகத்தில் மாணவர்கள் திலகமிட தடை விதிக்க பரிந்துரைத்துள்ள நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிஷனின் இந்து விரோத அறிக்கைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே சாதி வன்முறைகளை தடுக்க ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் கமிஷனை தமிழக அரசு அமைத்தது. அந்த கமிஷன் அறிக்கை நேற்று 18/06/2024 முதல்வரிடம் அளிக்கபட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்றும் நீக்க மறுக்கும் தனியார் பாடசாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. பெரும்பான்மையாக ஒரு சாதியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் அந்த சாதி சாராத தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் நடத்தை குறித்து வருடாந்திர ரகசிய ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும் என்றும் மாநில அரசின் ஆசிரியர் பயிற்சி பாடதிட்டம் மாற்றபடவேண்டும் என்பது போன்ற பல அபத்த ஆலோசனைகளை ஆய்வு என்ற பெயரில் அறிக்கையாக அளித்துள்ளார்.

அபத்தங்களுக்கு முத்தாய்ப்பாக மாணவ மாணவியர்கள் மணிகட்டில் கயிறு கட்டகூடாது. நெற்றியில் திலகமிடகூடாது, மிதிவண்டிகளுக்கு வண்ணம் பூசக்கூடாது மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை அளித்துள்ளது.

மணிக்கட்டில் காப்பு கயிறு கட்டக்கூடாது நெற்றியில் திலகமிடக்கூடாது என்று சொன்ன கமிஷன் மறந்தும் கூட சிலுவை அணியக்கூடாது, முகத்தை மறைக்கும் பர்தா அணியக்கூடாது என்று ஆலோசனை அளிக்கவில்லை என்பதில் இருந்தே கமிஷனின் நோக்கம் வெட்ட வெளிச்சம் ஆகிறது.

நடுநிலை பாடசாலை முதலாக கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை முதலாக தங்கும் விடுதிகள் உட்பட அணித்திலும் பின் தங்கியவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பட்டியல் சமூகத்தினர் என்று ஜாதி அடிப்படையிலேயே தனிதனியாக நடத்தி சாதி அடையாளத்தை திணிப்பதே அரசுதான். சாதி அடிப்படையில் பாடசாலைகளையும் அரசுதான் நடத்தி வருகிறது.

மத அடிப்படையிலும் அரசு பள்ளிகள் நடத்துகிறது என்பது முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு தெரியுமா? தெரியாதா? இஸ்லாமிய பாடசாலை, அரசு உருது பாடசாலை, கிறித்துவ பள்ளிகள், அரசின் உதவி பெரும் சிறுபான்மையினர் பள்ளிகள் என அனைத்து வித மதப் பள்ளிகளும் செயல்பட்டுவருகின்றன.

அந்த வகையில் சமூகத்தில் சாதி, மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தி பாடசாலைகளையும் நடத்தி வருவது சமூகநீதி பேசும், ஜாதி ஒழிப்பு பேசும் திராவிட மாடல் திமுக அரசுதான் என்பதை மறந்துவிடக்கூடாது.

கடந்த 60 ஆண்டுகளாக இங்கே திராவிட அரசுகள்தான் ஆட்சியில் இருந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது. ஊரெங்கும் மேடை போட்டு ஜாதியை ஒழித்தது நாங்கள்தான் என்று மார்தட்டி கொள்ளுகிற திமுக அரசுதான் இப்போது பாடசாலைகள் கல்லூரிகளில் சாதி அடிப்படையில் வன்முறை நடக்கிறது என்று கமிஷன் அமைத்து அறிக்கை வாங்கியுள்ளது. அந்தவகையில் எந்த சாதியைத் தான் திமுக அரசு ஒழித்தது? என்பதை அறிய மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

அந்த கமிஷன் அறிக்கையில் மாணவர்கள் நெற்றித் திலகமும், காப்புக் கயிறையும் அணிவதை தடை செய்துவிட்டால் ஜாதியை ஒழித்துவிடலாம் அன்று அரிய கண்டுபிடிப்பை கமிஷன் தெரிவித்துள்ளது வேடிக்கை. பெரும்பான்மை சமூகம் வசிக்கும் பகுதியில் உள்ள பாடசாலையில் அதே சமூகத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் நியமிக்க கூடாது என்ற ஆலோசனையை திமுக என்றாவது கடைப்பிடித்ததுண்டா?

ஒவ்வொரு தேர்தலின் போதும் எந்த தொகுதியில் எந்த சமூகத்தினர் பெரும்பான்மை என்று ஆய்வு செய்து வேட்பாளரை தேர்வு செய்யுது வெற்றிபெற திட்டமிடும் திமுக ஆட்சியில் தான் இதுபோன்ற கண்துடைப்பு ஆலோசனையை ஒருநபர் கமிஷன் அளிக்கிறது என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியங்களில் இல்லாத நீதி நூல்கள் உலகில் எங்கும் இல்லை எனலாம் அதுபோன்ற நீதி நூல்களை பாடசாலைகளில் நீதிபோதனை வகுப்புகள் என்ற பெயரில் நீண்ட காலமாக நடத்தி வந்ததை, பகுத்தறிவுக்கு சோதனை என்று தடை செய்த திமுக அரசிடம் அறநெறி வகுப்புகளை நடத்தவேண்டும் என்று கமிஷன் அறிக்கை கொடுத்துள்ளது. அதிலும் அறநெறி கற்பிக்க வெளியில் இருந்து ஆசிரியர் அல்லாதவர்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.

அதாவது திமுக ஆட்சியை பிச்சையிட்ட பாதிரியார்களை, கடவுள் மறுப்பு பேசும் நாத்திகவாதிகளை அறநெறி போதனையாளர்கள் என்ற பெயரில் மதமாற்ற பாடம் நடத்தவும், திராவிட மாடலை வளர்க்கவும் அனுமதிக்கலாம் என்ற உள்நோக்கத்தை அறிக்கையை படிக்கும் அனைவராலும் உணரமுடியும்.

திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை என அறத்தையும் நீதியையும் நெறியையும் போதிக்கும் நீதி நூல்களை பாடதிட்டத்தில் இருந்து நீக்கிய திராவிட அரசு இப்போது கமிஷன் அமைத்து அறநெறி வகுப்புகளுக்கு பரிந்துரை வாங்கியுள்ளது.

ஆங்கிலேய அடக்குமுறை காலத்தில் ஒவ்வொரு இந்து சமூக தனவந்தர்களும் அனைத்து இந்துக்களும் கல்வி பெறவேண்டும் என்று தங்கள் சொத்துகளை, பொன்னை பொருளை கல்வி வழங்க தானமாக கொடுத்து பாடசாலைகளை உருவாக்கியுள்ளார்கள்.

அந்த வள்ளல்களின் நினைவாக அந்த பாடசாலைகள் அவர்களின் பெயர் தாங்கி பல லட்சக் கணக்கானோருக்கு அன்றும், இன்றும், என்றும் கல்வி அளித்து வருகிறது. ஆனால் அவர்கள் பெயரோடு இணைந்துள்ள சாதி பெயரால் ஜாதிய பாகுபாடு வருகிறது என்று 60 ஆண்டுகால திராவிட ஆட்சி கமிஷன் அமைத்து கண்டுபிடித்துள்ளது.

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு, பேருந்து நிலையம் வணிக வளாகம், அரசு கட்டிடம் அரசு பாடசாலை என கண்ணில் படுபவற்றுகெல்லாம் ஈ.வெ.ரா, அண்ணா, கலைஞர் பெயர் சூட்டும் திமுக அரசு அவர்கள் பணத்தில் அவர்கள் சொத்தில் உருவாக்கிய ஒரே ஒரு பாடசாலையை காட்ட முடியுமா? பின் எதற்கு பாடசாலை கல்லூரிக்கு இவர்கள் பெயர்?

ஏற்கெனவே திராவிடத்தின் பெயரால் தமிழ் இலக்கியங்கள், மன்னர்கள், ஆன்மீக பெரியோர்களை, விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை முடி மறைத்தது திராவிட அரசு. இப்போது கல்வி வள்ளல்களின் பெயர்களை நீக்கினால் ஜாதி மோதல் ஒழியும் என்ற பெயரில் மிச்சம் உள்ள முன்னோர்களின் வரலாற்றையும் அழிக்க துடிக்கிறது.

உண்மையில் எந்த தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் சாதி சண்டை இல்லை. அரசு கல்வி நிறுவனங்களில் தான் இந்த சமூக சீர்கேடுகளைப் பார்க்க முடிகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசும், அரசு ஊழியர்கள் ஆகிய சில அரசுப் பள்ளி ஆசிரியர்களும். என்பதை மறுக்க முடியாது. இவர்கள் அரசியல் சார்பு உடையவர்களாகவே செயல்படுகிறார்கள் என்பதும் உண்மை தானே.

அதே போல, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க தயங்குவதில்லை. ஆனால் அரசு கல்வி நிறுவனங்களில் அது நடக்கிறதா? இதனை கடந்து செல்ல நீதியரசர் சந்துரு எதாவது அளவுகோல் வைத்திருந்தாரா? சாதி பெயர் கொண்ட வள்ளல்களின் பள்ளியில் இதுபோன்ற பேச்சு கூட எழுந்தது இல்லை. காரணம் அரசு பள்ளி எல்லாம் இலவசமாக கிடைக்கிறது பண்பும், படிப்பும் தவிர என்ற நிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

SJSF என்னும் சமூக நீதி மாணவர் படையை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்றும், அதை மாநில அரசே தனிகட்டுபாட்டில் வைத்துகொள்ள வேண்டும் என்றும் சமூக கேடுகளை தடுக்க அந்த படையை பயன்படுத்தவேண்டும் என்றும் அதற்கு நிதி திரட்ட குழு அமைக்க வேண்டும் என்றும் கமிஷன் அறிக்கை அளித்துள்ளது,

நாம் அனைவருக்கும் அறிந்த NCC என்னும் தேசிய மாணவர் படை, NSS என்னும் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற மாணவர் அமைப்புகள் பிற மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் பங்குபெறும் சீரிய அமைப்பாக இருந்து வருகிறது.

அதன்மூலம் மாணவர்களிடையே நல்லிணக்கமும் நல்லோழுக்கமும் தேசியமும் வளர்க்கும் மாணவர் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதற்கெல்லாம் இடமில்லை என்ற ரீதியில் அந்த அமைப்புகள் பெரும்பாலான அரசு பாடசாலைகளில் இல்லவே இல்லை என்னும் நிலை உள்ளது.

ஆனால் ஆளும் திமுக அரசும் கூட்டணி கட்சி ஆதரவாளரும் காம்ரேட் செயற்பாட்டாளரும் ஆன சந்துரு அவர்கள் அவர் விரும்பும் DYFI போன்ற அமைப்பை அரசு நிதியில் அமைக்க சமூகநீதிப்படை என்று முலாம் பூசி ஆலோசனை வழங்கி உள்ளதை அந்த ஆலோசனையை படிக்கும் எவரும் புரிந்துகொள்ள முடியும்.

கல்வி காவி மயமாதலையும், கல்வி நிலையங்களில் காவிமயம் நுழைவதை தடுக்கவும் விசாரிக்கவும் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று கமிஷன் ஆலோசனை வழங்கியுள்ளார்‌. திராவிடமும், கம்யூனிசமும், மிஷனரிகளும் ஒன்றிணைந்து உருவாக்கிய திட்டமிட்ட அறிக்கை என்பதை இந்த ஒரு ஆலோசனை அப்பட்டமாக காட்டியிருக்கிறது.

ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை முழுக்க முழுக்க முன்கூட்டியே திட்டமிட்டு திராவிட கம்யூனிச பிரச்சாரத்தை பாடசாலைகளில் புகுத்த உருவாக்கபட்ட அறிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.

மேலும் மணிக்கட்டு காப்புக் கயிறும், நெற்றித் திலகமும் ஒரு குறிப்பிட்ட இந்து சமுதாயத்திற்கு சொந்தமானதல்ல. அவை ஒட்டுமொத்த இந்து மக்களின் அடையாளங்கள். பண்டைய தமிழ் இலக்கியம் புறநானூற்றிலேயே வெற்றித்திலகம் இட்டு போருக்கு செல்வதை காட்டியுள்ளது.

அப்படியான பழம்பெரும் வழக்கத்தை தடை செய்யவேண்டும் என்று அறிக்கை அளிப்பது அப்பட்டமாக மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் மட்டுமல்ல, அரசியல் சாசனம் அளித்துள்ள மத சுதந்திரத்தை தடை செய்யும் செயலாகும்.

அந்த வகையில் திராவிடமும் கம்யூனிசமும் மிஷனரிகளும் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளார்கள் என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

எனவே மாணவர் பிரச்சனைக்கு சிறிதும் பொருத்தமில்லாத ஆலோசனைகளையும், இந்து மத பழக்கவழக்கங்களை தடை செய்யும் நோக்கத்துடனும், சமூக பெரியோர்களின் வரலாற்றை சிதைக்கும் வகையிலும், மத மாற்றத்திற்கு துணை போகும் வகையிலும், திராவிட கம்யூனிஸ மிஷநரி கும்பலின் பின்புலத்தில் உருவாக்கபட்டுள்ள அறிக்கைக்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் ஆளும் திமுக அரசு அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள கூடாது, நடைமுறைபடுத்த கூடாது என்றும் இதன்மூலம் வலியுறுத்துகிறது.

ஒரு நபர் கமிஷன் அறிக்கையை அரசு ஏற்கும் என்றால் இந்து முன்னணி அதனை எதிர்த்து மக்களைத் திரட்டி ஜனநாயக ரீதியில் பேரியக்கம் தொடர் போராட்டம் நடத்தும் என்பதையும் இவ்வறிக்கை வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்து ஆன்மிக பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், தேசபக்தர்கள் நீதிபதி சந்துருவின் ஒருதலைப்பட்சமான அறிக்கையைக் கண்டித்து தமிழக அரசு அதன் வழிகாட்டுதலை கைவிட வலியுறுத்த வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x