Published : 20 Jun 2024 12:07 PM
Last Updated : 20 Jun 2024 12:07 PM
வேலூர்: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 210 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அம்மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி வருவதால் அங்கு பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தென்மாநிலங்களுக்கான தேசிய பேரிடர் மீட்பு படை உதவியை மீட்புப் பணிகளுக்காக கோரியுள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 210 பேர் கொண்ட 9 குழுக்கள் துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன் தலைமையில் இன்று (ஜூன் - 20) அதிகாலை கேரளாவுக்குப் புறப்பட்டன.
இவர்கள், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றனர். இந்த குழுவில் மீட்பு உபகரணங்களாக ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகள், கயிறுகள், மருத்துவ முதலுதவி சிகிச்சை சாதனங்கள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்கின்றனர்.
இந்தக் குழுவினர் தென்மேற்கு பருவமழை முடியும் வரை கேரளாவில் தங்கி மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், மழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட வசதியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் சிறப்பு அவசர கட்டுபாட்டு மையம் அமைத்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT