Last Updated : 20 Jun, 2024 11:14 AM

3  

Published : 20 Jun 2024 11:14 AM
Last Updated : 20 Jun 2024 11:14 AM

கள்ளச் சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு,

விழுப்புரம்: கள்ளச் சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியது, “தொடர்ந்து 45 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறேன். 2016ம் ஆண்டு கூட்டணி இல்லாமல் தனியாக நின்றபோது ஆட்சியில் அமர்த்தி இருந்தால் ஒரு சொட்டு சாராயம் இல்லாத தமிழகத்தை வரவேற்கவேண்டும். கள்ளகுறிச்சியில் 38 பேர் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும்.

கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம், மதுராந்தகத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு செயல்பட்டு இருக்கவேண்டும். கள்ளகுறிச்சி ஆட்சியர் கள்ளச் சாராயம் குடித்து இறக்கவில்லை என்று கூறிவிட்டு, உயிரிழப்பு அதிகரித்தபோது அரசு ஒப்புக்கொண்டது.

காவல்துறைமீதான நடவடிக்கை சரியானதுதான். கள்ளகுறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலுவின் ஆதரவாளரான எம்.எல்.ஏ.வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கைது செய்தவர்களை விடுவிக்க சொல்லியுள்ளனர். சாராய வணிகரான கோவிந்தராஜ் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பேனர் வைத்துள்ளார்.

மதுவிலக்குதுறை அமைச்சர் முத்துசாமி, பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இச்சாவுகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். கள்ளச் சாரயம், கஞ்சா விற்பனையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது. மது வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு குடிபழக்கம் உள்ளவர்கள்கூட வேண்டாம் என்றே கூறுவார்கள். தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கை இக்கூட்டத்தொடரில் அரசு அறிவிக்கவேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வலியிறுத்தினேன். தேசிய அளவிலோ, மாநில அளவிலோ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். தமிழக அரசு நினைத்தால் ஒரே மாதத்தில் இக்கணக்கெடுப்பை நடத்த முடியும்.

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மக்களவை தேர்தலை மனதில் வைத்து வழங்கப்பட்ட மகளீர் உரிமைத் தொகையை படிப்படியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எவ்வித நிபந்தனை இல்லாமல் இத்தொகை வழங்கப்படவேண்டும். இதை நிறுத்தினால் பாமக போராட்டம் நடத்தும். மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் புரட்சி வெடிக்கும்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால் மின் கட்டணத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தியதன் பேரில் ரூ 65 ஆயிரம் கோடி வருவாய் உயர்ந்தும் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது. மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டை அரசே ஏற்று நடத்தவேண்டும்.

அங்கு பணியாற்றும் 562 தொழிலாளர்களுக்கு ₹2.62 லட்சம் அறிவித்துள்ள இழப்பீடு போதாது. அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ 10 லட்சம் உயர்த்தவேண்டும். அரசே ஏற்று நடத்தாவிட்டால் தொழிலாளர்களுக்கு தலா 5 ஏக்கர் தோட்டத்தை வழங்கவேண்டும். நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும். ஒடிசாவில் ஏல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும். நியாயவிலைக் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கவேண்டும். விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் சி அன்புமணிக்கு பணியாற்ற தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் நானும் கூட்டணிக்கட்சி தலைவர்களும் பரப்புரை மேற்கொள்ள உள்ளோம். திமுக மீதான கோபத்தை இத்தேர்தலில் காட்டுவார்கள். 2026 தேர்தலுக்கு இத்தேர்தல் முன்னோட்டமாக அமையும்.

இத்தேர்தல் வழக்கமான இடைதேர்தல் அல்ல. அதிமுக இத்தேர்தலை புறக்கணித்துள்ளது. இதற்காக அதிமுக சொன்ன காரணங்கள் உண்மையிலும் உண்மை. திமுகவிற்கு எதிரான பாமக வேட்பாளர் அன்புமணியை கருதவேண்டும். திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். திமுகவின் வீழ்ச்சி இத்தேர்தல் மூலம் தொடங்கும்.” என்றார்.

அப்போது மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x