Published : 19 Jun 2024 10:40 PM
Last Updated : 19 Jun 2024 10:40 PM
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சமர்ப்பித்த அறிக்கை இந்து மதத்தினரை குறிவைப்பதாக உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக காழ்ப்புணர்வு நடவடிக்கை எடுக்கும் வகையிலும் அதன் பரிந்துரைகள் உள்ளன. அந்த அறிக்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
ஹிஜாப் அணிய தடை விதித்தால் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று பேசுபவர்கள், இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, கைகளில் கயிறு அணியக் கூடாது என்று கூறுகிறார்கள். மேலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஒரு பள்ளிக்கூடம் என்று சொன்னால், அந்த இடத்தை சுற்றி வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர் அந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கக் கூடாது என்றால், அதை எப்படி செயல்படுத்த முடியும்?
எனவே இந்த அறிக்கை, இந்து மதத்தினரை குறிவைப்பது போல இருக்கிறது. உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இது நிராகரிக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு” என்று எச்.ராஜா பேசினார்.
முன்னதாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
அந்தவகையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தனது பரிந்துரை அறிக்கையை தயார் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சமர்பித்தார்.
அதில், புதிதாக தொடங்கப்படும் பள்ளியின் பெயரிலும் சாதி பெயர் இடம்பெறாதவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை அவ்வப்போது இடமாற்றம் செய்ய வேண்டும். முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் போன்ற முக்கிய பொறுப்புகளில் அந்தப் பகுதிகளின் பெரும்பான்மை சாதியை சேர்ந்தவர்களை பணியமர்த்தக்கூடாது. மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதையும், நெற்றியில் திலகம் இடுவதையும் தடை செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT