Last Updated : 19 Jun, 2024 10:01 PM

 

Published : 19 Jun 2024 10:01 PM
Last Updated : 19 Jun 2024 10:01 PM

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தவிப்பும் பின்புலமும் | HTT Explainer

“எஸ்டேட் பகுதியில் வாழ்ந்த எங்களுக்கு சமநில பகுதியில் எப்படி வாழ்வது என்பது தெரியவில்லை” என்ற பரிதவிப்புக் குரலுக்குப் பின்னால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பல்லாண்டு வாழ்வியல் ஏக்கமும் துக்கமும் நிறைந்துள்ளது. இந்தப் பிரச்சினையின் முழுமையான பின்புலம் இதுதான்...

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது குதிரை வெட்டி பகுதிகள் மூடப்பட்டு சுமார் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம் 1929-ம் ஆண்டு ‘தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2028-ம் ஆண்டு நிறைவடைகிறது.

இந்த நிலையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்திருப்பதாலும், காப்புக்காடாக இருப்பதாலும், வரும் 2028-ம் ஆண்டுக்குள் வெளியேறுமாறு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தோட்ட நிர்வாகம் அங்கிருந்து வெளியேற முடிவு செய்து, இங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் செல்ல கடந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியிட்டது. அதன் விவரம்:

மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிங்கம்பட்டி குரூப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால், சிங்கம்பட்டி குரூப்பின் வணிகத்தை நிலைதிருத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ பி.பி.டி.சி.லிமிடெட் வெளிப்படுத்தும் விருப்ப பணி ஓய்வு திட்டம் மூலம் தொழிலாளர்கள் தங்களது தகுதியின் அடிப்படையில் பலன்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அதனை தேர்வுசெய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

விருப்ப பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பிபிடி லிமிடெட் நிறுவனமானது, சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய பலன்கள் மட்டுமல்லாது அதனோடு சேர்த்து கருணைத் தொகையும் மற்றும் 2023-2024-ம் நிதியாண்டுக்கான சட்டப்படியிலான போனஸ் தொகையும் (மிகை ஊதியம்) இணைத்து வழங்கப்படும். விருப்ப பணி ஓய்விற்கான அனைத்து வழிமுறைகளும் தீர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கும் அனைத்து தொழிலாளர்களும் அதில் கையொப்பமிட வேண்டும்.

விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரவர்கள் பெறுகின்ற பணப்பலன்களின் உண்மையான தொகையினை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாக கடிதங்கள் கொடுக்கப்படும். தீர்வு ஒப்பந்தத்தின் நகலும் மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்ப படிவமும் மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து எஸ்டேட் டேட் அலுவலகத்திலும் தேயிலை தொழிற்சாலை அலுவலகத்திலும் தொழிலாளர்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க கடந்த 14-ம் கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இங்கிருந்த தொழிலாளர்கள் பலரும் விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை பெற்று கையெழுத்திட்டு அளித்துவிட்டனர்.

இந்நிலையில், குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்னரே பிபிடிசி நிறுவனம் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது தொழிலாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் அளித்திருக்கிறது.

இந்நிலையில்தான் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ள நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரில் தங்களது மறுவாழ்வுக்கான அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இது தொடர்பாக ஊத்து தேயிலை தோட்டத்தில் மெக்கானிக்காக பணியாற்றிய கணேசன் கூறும்போது, “எங்கள் தாத்தா காலத்திலிருந்தே இங்கேயே பணிபுரிந்து வருகிறோம். தற்போது விஆர்எஸ் என்று ஒரு தொகையை அளிக்க முன்வந்துள்ளனர். ஆனால், அதில் எங்களுக்கு திருப்தி இல்லை. இந்த பணத்தில் நாங்கள் எங்கு சென்று வாழ்வது என்பது தெரியவில்லை. வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

கணேசன்

எஸ்டேட் பகுதியில் வாழ்ந்த எங்களுக்கு சமநில பகுதியில் எப்படி வாழ்வது என்பது தெரியவில்லை. தமிழக அரசுதான் எங்களுக்கு நல்ல வழிகாட்ட வேண்டும். இந்த எஸ்டேட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும். சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தால் மிகப் பெரிய உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஸ்டாலின்

விருப்ப ஓய்வு விண்ணப்பம் அளித்துள்ள ஊழியர் ஸ்டாலின் கூறும்போது, “எங்கள் வாழ்வாதாரம் என்னவாகுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். அரசிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்த்துள்ளோம். இதுவரை வீடுகளை காலி செய்யாமல் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x