Published : 19 Jun 2024 09:11 PM
Last Updated : 19 Jun 2024 09:11 PM

சென்னை - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி

மின் இணைப்பு  கருவியில் ஏற்பட்ட பழுதால் அத்திப்பட்டு  புதுநகர் நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்

சென்னை: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், எண்ணூர் - மீஞ்சூர் இடையே மின்சார ரயிலின் மின் இணைப்பு கருவி அடுத்தடுத்து பழுதடைந்ததால், அந்த ரயில் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதற்கு பின்னால் வந்த 3 மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், மின்சார ரயில் சேவை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு புதன்கிழமை மாலை 5.05 மணிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கொருக்குப்பேட்டை நிலையத்தை கடந்து, எண்ணூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, இந்த ரயிலின் மின் இணைப்பு கருவி பழுதடைந்தது. இதையடுத்து, இந்த ரயில் மெதுவாக நகர்ந்து, அத்திப்பட்டுபுதுநகர் நிலையத்தை மாலை 5.45 மணிக்கு அடைந்தபோது, மீண்டும் பழுதடைந்தது. இதையடுத்து, அந்த ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இந்த ரயிலுக்குப் பின்னால் வந்த மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து, ரயில்வே பொறியாளர்கள் அங்கு விரைந்து வந்து, ரயிலின் மின் இணைப்பு கருவியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி மின் இணைப்பு கருவியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் 6.50 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றபோது, மீஞ்சூரில் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ரயில் அங்கேயே ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. பயணிகள் அடுத்தவந்த மின்சார ரயிலில் ஏறி பயணிக்க தொடங்கினர். மின்சார ரயிலில் அடுத்தடுத்து ஏற்பட்ட பழுதால், மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “சென்ட்ரலில் இருந்து 5.05 மணிக்கு புறப்பட்ட மின்சார ரயில் இரண்டு முறை மின் இணைப்பு கருவியில் பழுது ஏற்பட்டு, நிறுத்தப்பட்டது. ஒரு வழியாக பழுது நீக்கி,ரயில் மீண்டும் புறப்பட்டுவிட்டது என்று நினைத்தபோது, மீண்டும் பழுதுஏற்பட்டு, ஓரங்கட்டப்பட்டது. இந்த மின்சார ரயிலை முறையாக பராமரிப்பு செய்யாததால், இதுபோன்ற பழுது ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட பயணிகள் ரயிலுக்கு கொடுப்பது இல்லை,” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x