Published : 19 Jun 2024 08:25 PM
Last Updated : 19 Jun 2024 08:25 PM
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் வெறிநோய் (ரேபிஸ்) பாதிப்பால் 16 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தெருக்கள், சாலைகள், வீடுகளில் இருக்கும் நாய்கள், பூனைகள் உள்ளிட்ட பிராணிகளால் கடித்து காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெறிநோய் (ரேபிஸ்) தொற்றில் இருந்து செல்ல பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு ஒரேவழி தடுப்பூசி மட்டுகே உள்ளது. நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை அத்தடுப்பூசியை செலுத்துதல் அவசியம் ஆகும்.
ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதர்களை அவை கடிக்கும்போது ரேபிஸ் தொற்று பரவி இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன்படி, நடப்பாண்டில் இதுவரை 16 பேர் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை சிறப்புப் பணி அலுவலர் வடிவேலன் கூறியதாவது: “தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய் கடியால் 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால், ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது.
தமிழகத்தில் நடப்பாண்டில் கோவையில் 3, திருப்பூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சியில் தலா 2, ஆத்தூர், ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், விருதுநகர், திருவள்ளூர், சென்னையில் தலா ஒருவர் என மொத்தம் 16 நபர்கள் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதில், பெரும்பாலானோர் பாதிப்பு தீவிரமடைந்த பின்னர் சிகிச்சைக்கு சென்றவர்கள் ஆவர். அந்த இறப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான ரேபிஸ் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணி கடித்தவர்களுக்கு முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-வது நாளில் என 4 தவணைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆழமான காயமாக இருந்தால், அந்த இடத்தில் இம்யூனோக்ளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படும். நடப்பாண்டில் ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. விழிப்புணர்வு இல்லாமல், சிகிச்சை பெறாமல் இருப்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT