Published : 19 Jun 2024 07:49 PM
Last Updated : 19 Jun 2024 07:49 PM
சென்னை: ப்ளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்தும்படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ப்ளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்த தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ப்ளூ கிராஸ் அமைப்புக்கு எதிரான புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கடந்த பிப்ரவரி மாதம் திடீரென ஆய்வு நடத்தியது. ப்ளூ கிராஸில் பராமரிக்கப்படும் நாய், பூனைகளுக்கு முறையாக உணவு அளிக்கப்படுவதில்லை.
அங்குள்ள வளர்ப்பு விலங்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ப்ளூ கிராஸ் அமைப்புக்கு தமிழக அரசு நிலம் வழங்கியுள்ளது. எனவே அந்த அமைப்பை தமிழக அரசின் விலங்குகள் நல வாரியமே ஏற்று நடத்த வேண்டும். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் நிதி பெறும் ப்ளூ கிராஸ் அமைப்பின் நிதி விவரங்களை வருமான வரித்துறை மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடைத்துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், வருமான வரித்துறை, ப்ளூ கிராஸ் ஆகியவை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT