Last Updated : 19 Jun, 2024 07:45 PM

2  

Published : 19 Jun 2024 07:45 PM
Last Updated : 19 Jun 2024 07:45 PM

“பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும்” - மாணிக்கம் தாகூர்

மதுரை: பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளையொட்டி, மதுரை தனக்கன்குளம் பகுதியில் மரம் நடும் விழா நடந்தது. விழாவில் வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''உலகளவில் 461-வது இடத்தில் இருந்த அதானியை இரண்டாவது பணக்காரர் ஆக்கிய பெருமை பிரதமர் மோடியை சேரும். விவசாயம் காக்க போகிறோம் என்ற பிரதமரின் பேச்சு எல்லாம் கதை.

ராகுல் காந்தியை மீண்டும் வாழ்த்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ அண்ணனின் அன்புக்கு நன்றி. அவரின் ஆசிர்வாதத்துக்கும், பண்புக்கும் நன்றி. அவர் மதுரைக்காரன் என்பதை காட்டிவிட்டார். மதுரைக்காரர்கள் வெள்ளை மனம் படைத்தவர்கள். அவரின் வாழ்த்துக்கு எங்கள் நன்றி.

26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கான கூட்டம் நடக்கிறது. இதன்பின் நிச்சயமாக எய்ம்ஸ் கட்டுமான பணி, விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கண்டிப்பாக கேள்விகளை எழுப்புவேன். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்ட ணியும் ஒற்றுமையுடன் இந்த பாராளுமன்ற கூட்டத்தை எதிர்கொள்வோம். மக்களவை கூட்டத்தில் நல்ல விவாதம் நடக்கவேண்டும். இந்தியா கூட்டணியை பொறுத்தளவில் சில மாநிலங்களில் அந்தந்த மாநில அளவில் கூட்டணி முடிவாகிறது.

அவ்வகையில் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மாநிலங்களில் மாநில அளவில் கூட்டணி முடிவு செய்யப்படுகிறது. கட்சிகளுக்குள் வேறுபாடு தொடர்கிறது. இந்தியா கூட்டணி என்பது டெல்லியில் ஆட்சி அமைக்கவும், வெறுப்பு அரசியலில் இருந்து இந்தியாவை காப்பாற்றவுமே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெற்றி கூட்டணியாக உள்ளோம். காங்கிரஸ் சார்பில், வரும் 21ம் தேதி நீட் தேர்விற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது.

நீட் தேர்வு குளறுபடிக்கு மத்திய அரசு மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சருமே முக்கிய காரணம். இது பற்றி மக்களவையில் கேள்வி எழுப்பப்படும். வயநாடு தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பிரியங்கா காந்தி 4 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவரது மக்களவை பிரவேசம் காங்கிரஸ், இந்தியா கூட்டணிக்கு பலமாக இருக்கும்.

எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருத்துக்களை சொல்லிவிட்டோம். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பை ஏற்க வலியுறுத்தியுள்ளோம். இதற்கு நேரம் வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி நல்ல முடிவை எடுப்பார் என, நம்புகிறோம்'' என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x