Published : 19 Jun 2024 06:27 PM
Last Updated : 19 Jun 2024 06:27 PM

மாணவர்கள் திலகம் இட தடை விதிக்கச் சொல்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது: தமிழக பாஜக

நாராயணன் திருப்பதி | கோப்புப் படம்

சென்னை: “தமிழகத்தில் பல ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி மோதல்கள் அல்லது வேற்றுமை உருவாக காரணம் என்ன என்பதை நீதிபதி சந்துரு ஆராய்ந்திருந்தால் இந்தப் பிரச்சினையின் மையப்புள்ளி மாணவர்கள் இல்லை, அரசுப் பள்ளிகளின் மோசமான நிர்வாகம்தான் முழு காரணம் என்பது புரிந்திருக்கும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்த்து, நல்லிணக்கம் ஏற்பட, வழிமுறைகளை வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை ஒன்றினை பரிந்துரை செய்துள்ளார். அந்த அறிக்கையின்படி, பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு பள்ளிகளில் விதிக்க வேண்டும் என்றும் கள்ளர் மறுசீரமைப்பு பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்றவற்றை நீக்கிவிட்டு அரசுப்பள்ளி என அழைக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார். ஆனால், பிரச்சினை பெயரில் இல்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் பல ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி மோதல்கள் அல்லது வேற்றுமை உருவாக காரணம் என்ன என்பதை நீதிபதி சந்துரு ஆராய்ந்திருந்தால் இந்த பிரச்சினையின் மையப்புள்ளி மாணவர்கள் இல்லை, அரசு பள்ளிகளின் மோசமான நிர்வாகம்தான் முழு காரணம் என்பது புரிந்திருக்கும்.

எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற அளவுக்கு தமிழகம் அரசியல் விழிப்புணர்வுள்ள மாநிலம். அதிலும் இரு கழகங்களின் அரசின் பிடியில் கடந்த 50 வருடங்களாக உள்ள மாநிலம். சாதிய அடிப்படையில், சாதிய ஆதிக்கத்துடன் தான் தமிழக அரசியல் கட்சிகள் பயணிக்கின்றன என்பதை யாராலேனும் மறுக்க முடியுமா? மறைக்க முடியுமா?

மாணவ, மாணவிகள் திலகம் இட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கே எதிரானது என்பதை சந்துரு உணர்வாரா? மனிதனுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கு, மரத்துக்கு, கல்லுக்கு, தொழில் புரியும் கருவிக்கு, மாட்டுக்கு என நம் அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் அனைத்துக்கும் திலகமிடுவது, நம் பண்பாடு, கலாச்சாரம். பிரச்சினை திலகத்தில் இல்லை, அரசியல்வாதிகளின் கலகத்தில் தான் உள்ளது என்பதை சந்துரு கவனிக்க தவறியது தற்செயலா? அல்லது அழுத்தமா?

அப்படி அவர் மத அடிப்படையில் குறிப்பிட்டிருந்தால், தைரியமிருந்தால் கிறிஸ்தவ பள்ளிகளில் சிலுவையோ, இஸ்லாமிய பள்ளிகளில் அம்மத சின்னங்களோ இடம்பெறக் கூடாது என்று இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லவா? பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்க வேண்டும் அல்லவா? ஆசிரியர்களை அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

ஆசிரியப் பணி என்பது மதிப்பு மிக்கதோடு, ஒவ்வொரு ஊரில் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தான் அந்த ஊரின் அடுத்த தலைமுறைகளை பயன்படுத்தி எதிர்கால இந்தியாவை படைப்பவர்கள் என்பதை நீதிபதி சந்துரு மறந்துவிட்டதேன்? ஆசிரியர்கள் தான் ஒரு ஊரின் ஒவ்வொரு தலைமுறையை செதுக்குப்பவர்கள் என்பதை நீதிபதி சந்துரு உணரத்தவறியது ஏனோ? பெற்றோர்களை அடுத்து ஆசிரியர்கள்தான் மாணவர்களின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், ஆசிரியப்பணியை மற்ற அரசுப் பணியினை போல் அணுகியுள்ளார் நீதிபதி சந்துரு.

பெயரை நீக்கிவிட்டால் சாதியை அழித்துவிடலாம் என துருப்பிடித்த வாதத்தின் பரிந்துரையை புறந்தள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், அதுதான் சாதி ஒழிப்புக்கு தீர்வாக இருந்தால், இந்நேரம் தமிழகத்தில் சாதிகள் ஒழிந்து போயிருக்கும், இடஒதுக்கீட்டுக்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும். இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள், சாதியை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது விந்தையிலும் விந்தை. சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது, இருக்கக்கூடாது. ஆனால், மேலும் மேலும் சாதி ரீதியாக இடஒதுக்கீட்டை வேண்டுபவர்கள், சாதியை ஒழித்து விடுவதாக சொல்வது கேலிக்கூத்தாகத்தான் உள்ளது.

பெரும்பான்மை சாதியை சேர்ந்தோரை கல்வித்துறை அதிகாரிகளாக அந்தந்த பகுதிகளில் நியமிக்கக் கூடாது என்ற பரிந்துரை வெட்கக்கேடானது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கது. தகுதியின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் இயங்க வேண்டுமேயன்றி சாதி ரீதியாக அல்ல என்பதை முன்னாள் நீதிபதி சற்றும் சிந்திக்க மறந்தது, அவர் நீதிபதியாக இருந்த காலத்தை நினைத்துப் பார்த்து வியப்படைய வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே கல்வி கற்பிக்க வேண்டுமா என்று அன்று கேட்டவர்கள், எந்த சமுதாயத்துக்காக அதை கேட்டார்களோ, அதே சமுதாயம் அந்த பணியை இப்போது செய்யக்கூடாது என்று சொல்வதுதான் காலத்தின் கோலம்.

முன்னாள் நீதிபதி சந்துரு குறிப்பிட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் ஏற்கெனவே அரசின் விதிகளாக, சட்டங்களாக உள்ளவைகள்தான். ஆனால், அவற்றை முறையாக அமல்படுத்தாது தான் மாணவர்கள் இடையேயான பிரிவினைகளுக்கு காரணம் என்பதுதான் உண்மை. அதை அமல்படுத்தாததற்கு காரணம் அரசியல்வாதிகளும், அரசுகளும்தான் என்கிற உண்மையை முன்னாள் நீதிபதி சந்துரு போன்றவர்கள் சொல்ல தயங்குவது ஏமாற்றம் மட்டுமல்ல, சமூக அநீதியும் கூட.

குழந்தைகளை வளர்த்து, நெறிப்படுத்தி, பொறுப்புள்ள குடிமகன்களாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின், ஆசிரியரின் கடமை. அதற்கான சூழ்நிலையை, கட்டமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசினுடையது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் சமுதாயத்தின் அங்கம். அந்த சமுதாயத்தை கட்டமைத்து நேர்வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசினுடையது.

ஆனால், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, அதில் குளிர் காய்ந்து கொண்டு ஒட்டுமொத்த அமைப்பையும் தங்களின் அரசியல் வியாபாரத்துக்கு ஏற்ற வகையில் அமைத்து கொண்டு சாதி அரசியலை முன்னெடுத்து, கட்சி பதவி, தேர்தலில் வேட்பாளர்கள் என அனைத்தும் சாதி மயமான தமிழகத்தில் சாதி ரீதியாகத்தான் கிராம வார்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை அணுகப்படுகிறது.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த சாதிய வன்மங்கள் காணப்படுவதில்லை என்பதற்கு பொது மக்களே காரணம். ஆனால், அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என ஓட்டுக்காக. அது தரும் பதவிக்காக. அந்த பதவி தரும் பணத்துக்காக ஒட்டுமொத்த அரசு அமைப்பையுமே சாதி வெறியோடு ஊட்டி வளர்ப்பது அரசியல் கட்சிகளின், ஆட்சியாளர்களின் சுயநலம்தான்.

லஞ்சம், ஊழல், முறைகேடுகள், அரசியல் அழுத்தங்கள் தான் ஆசிரியர் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் நியமனங்களில் நடைபெறுகின்றன என்பது உலகறிந்த உண்மை. தமிழக கல்வித் துறையானது லஞ்சம், ஊழலில் சிக்கித்தவித்து சின்னாபின்னமாகி காலங்கள் பல ஆகின்றன. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற காலங்கள் மலையேறிப்போய் விட்டன. குருவுக்கு தட்சனை கொடுக்கும் காலம் போய், குருவாக தட்சனை கொடுக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதை சந்துரு சொல்ல மறந்ததேன்?

மீண்டும் சொல்கிறேன், தனியார் பள்ளி கல்லூரிகளில் இல்லாத சாதிய வன்மம் அரசுப் பள்ளிகளில் ஏன் உள்ளன? எல்லா மாணவர்களும் ஒன்றுதான். பிஞ்சு உள்ளங்கள்தான். மாற்றம் தேவைப்படுவது மாணவர்களிடத்தில் அல்ல, சமுதாயத்தில், அந்த சமுதாயத்தை கட்டமைக்கும் அரசியல்வாதிகளிடத்தில், அந்த அரசியல்வாதிகளை ஆட்டிப்படைக்கும் அரசிடத்தில்.

அந்த அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் தான் அரசில் உள்ளது என்பதை மறைக்க தான் முன்னாள் நீதிபதி சந்துரு போன்றவர்களின் அறிக்கைகள். இது வெள்ளை அறிக்கை அல்ல. வெற்றுக் காகித அறிக்கை. இது அறிக்கை அல்ல, மாணவர்களுக்கான அநீதி. முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கருப்பு அறிக்கை. தமிழக அரசும், முதல்வரும் அதை புறந்தள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x