Last Updated : 19 Jun, 2024 04:44 PM

1  

Published : 19 Jun 2024 04:44 PM
Last Updated : 19 Jun 2024 04:44 PM

“தமிழகத்தில் அடுத்தது அதிமுக ஆட்சிதான்” - எடப்பாடி பழனிசாமி உறுதி

நாகையில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்

நாகப்பட்டினம்: “எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையையோடு ஆட்சி அமைக்கும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாகையில் பல்வேறு மாற்று கட்சிகளிலிருந்து விலகி சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்வு எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 640 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமில்லை. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றிபெற்று அதிமுக தனிப் பெரும்பான்மையையோடு ஆட்சி அமைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் நான் முதல்வராக இருந்தபோது கண்ணின் இமைபோல விவசாயிகளை பாதுகாத்து வந்தோம். நாகை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயலின்போது அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து சாதனை படைத்தோம். வறட்சி வருகின்ற நேரமெல்லாம் நிவாரண தொகைகளை வழங்கியது அதிமுக ஆட்சி.

டெல்டா விவசாயிகளின் நிலம் பறிபோக விடாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல், ஐந்தாண்டு கால ஆட்சியில் இரண்டு முறை கூட்டுறவு கடன் மற்றும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு.

விவசாய தொழிலாளிக்கு பசுமை வீடு, கறவை மாடுகள், தடையில்லா உணவுப்பொருள் என வழங்கி ஏழை மக்களை பாதுகாத்த அரசு அதிமுக அரசு. குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்தது மட்டுமல்லாமல் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற உதவி செய்தோம். நாகை மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவ கல்லூரி உருவாக்கியதும் அதிமுக அரசுதான்,” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்வில் இஸ்லாம் மதத்தின் புனித நூலான குரானை கட்சியில் இணைந்தோருக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினர். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, சின்னையன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், மோகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் திருமண நிகழ்வில், கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x