Last Updated : 19 Jun, 2024 12:43 PM

2  

Published : 19 Jun 2024 12:43 PM
Last Updated : 19 Jun 2024 12:43 PM

சிதம்பரம் அருகே பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ்கள்: தீட்சிதர் உட்பட இருவர் கைது

போலி சான்றிதழ்

கடலூர்: சிதம்பரத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பெயரில் போலிச் சான்றிதழ்களை தயாரித்த தீட்சிதர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த கும்பலைச் சேர்ந்த தீட்சிதர் உட்பட இருவரை கைது செய்து போலீஸார், தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு கம்ப்யூட்டர்கள், லேப்டாப் பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமப் பகுதியில் பள்ளி, கல்லூரி, மாணவர்களின் சான்றிதழ்கள் கிடந்துள்ளது.

இதனைப் பார்த்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் நேற்றிரவு (ஜூன்.18) சிதம்பரம் காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளார். தகவலை அடுத்து அங்கு சென்ற போலீஸார் அங்கு கிடந்த 80-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பறிமுதல் செய்து அத்துடன் கிடந்த ஒரு ரசீதையும் கைப்பற்றினர்,

அப்போது ரசீது யார் பெயரில் உள்ளது என பார்த்தபோது சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்ந்த சங்கர் தீட்சிதார் என்பது தெரிய வந்தது அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவருடன் சிதம்பரத்தைச் சேர்ந்த நாகப்பன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீஸார் அவரையும் கைது செய்து, இருவரையும் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையிலான போலீஸார் தனி இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இந்தியாவில் உள்ள கேரளா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக சான்றிதழ்கள் மற்றும் பள்ளிகளுக்கான போலி சான்றிதழ்கள் என இதுவரைக்கும் 5000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் போலீஸார் அவர்களிடமிருந்து இரண்டு கம்ப்யூட்டர்கள், லேப்டாப், போலி சான்றிதழ்களை பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான பிரின்டர் அவர்கள் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் தயாரித்து வைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். தமிழக முழுவதும் இவர்களுக்கு ஒரு கூட்டமைப்பு இருப்பதாகவும், இதில் முக்கிய புள்ளிகள் பலர் உடந்தையாக இருக்கலாம் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் தனி இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பது சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x