Published : 19 Jun 2024 06:53 AM
Last Updated : 19 Jun 2024 06:53 AM

3 புதிய குற்றவியல் சட்டங்களையும் மறுபரிசீலனை செய்க: அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 ஆகியவற்றை ரத்து செய்து 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த 3 சட்டங்களின் திருத்தம் போதிய ஆலோசனைகள் இல்லாமல் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப்பட்டியல் 3-க்குள் அடங்கும். எனவே மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு தங்கள் கருத்துகளை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்படாததால், எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல் புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

பாரதிய நியாயா சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாக்ரிக்சுரக்‌ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்ஷ்யா ஆதினியம் (பிஎஸ்ஏ) என்று 3 சட்டங்களுக்கும் சம்ஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. இது இந்திய அரசியலமைப்பின் 348-வது பிரிவை தெளிவாக மீறுகிறது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயமாகும்.

தெளிவற்ற விதிகள்: கூடுதலாக, இந்த சட்டங்களில் சில அடிப்படை பிழைகள் உள்ளன. உதாரணமாக, பாரதிய நியாயா சன்ஹிதாவில் 2 வெவ்வேறு வகை கொலை குற்றங்களுக்கு 2 உட்பிரிவுகள் உள்ளன. ஆனால் இவை இரண்டும் ஒரே தண்டனையைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தில், மேலும் சில விதிகள் உள்ளன. அவை தெளிவற்ற அல்லது சுயமுரண்பாடு கொண்டவையாகும்.

மேலும், இந்த புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை திருத்துவதற்கு போதுமான நேரம் தேவைப்படும். இதன் அடிப்படையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் கருத்துகளை கவனத்தில் கொண்டு புதிய சட்டங்களை மறுபரிசீலனை செய்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சட்டங்களை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஜூலை 1 முதல் அமல்: முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை என்ற மாநாட்டில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசும்போது, “பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாமற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம்ஆகிய மூன்று சட்டங்களும் கடந்தஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதே மாதத்தில் அந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டங்களுக்கு மாற்றாக மேற்கண்ட மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசுஉருவாக்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கணக்கில் கொள்ளும்போது, இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளன.

இவற்றை அமல்படுத்த தேவையான பயிற்சியை போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் அளித்து வருகிறது. நீதித் துறை அகாடமி, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களும் அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இந்த மூன்று புதிய சட்டங்களும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளன. மத்தியில் உருவாகியுள்ள கூட்டணி மிகவும் வலிமையான அரசு என்பதால் பொது சிவில் சட்டமும் அமல்படுத்தப்படும்” என்று அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x