Published : 18 Jun 2024 10:12 PM
Last Updated : 18 Jun 2024 10:12 PM
திருநெல்வேலி: மூளைச்சாவு அடைந்த இளநிலை வருவாய் ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்தவர் மாதவ சங்கர் (37). இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதவ சங்கர், இரவில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் செங்குளம் பகுதியில் முருகன் என்பவர் சாலையின் குறுக்கே சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதவ சங்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இருவரையும் முன்னீர்பள்ளம் போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாதவ சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர்.
இதை தொடர்ந்து அவரது கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், தோல் மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனைக்கும், கண்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் முன்னிலையில் மருத்துவ குழுவினர் உடல் உறுப்புகளை பாதுகாப்பாக அந்தந்த பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT